ஏதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்… கமலிடம் கண்ணீர் விட்ட பொதுமக்கள்

சென்னை : சென்னை எண்ணூர் பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் நடிகர் கமல்ஹாசனிடம் ஏதாவது செய்து எங்களை இந்த மாசில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதறினர்.

திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் பகுதியில் நெட்டுக்குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எண்ணூர் முகத்துவார பகுதியில் அனல்மின்நிலைய கழிவுகள் கொட்டப்படுவதால் அலையாத்திக் காடுகள் அழிந்து மீன்வளம் குறைந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த மழையின் போது தென்சென்னை பாதிக்கப்பட்டது போல இந்த வடகிழக்குப் பருவமழையால் வடசென்னை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக அவர் இன்று அதிகாலையில் எண்ணூர் பகுதிக்கு சென்று சுற்றுச்சூழல் மாசு குறித்து நேரில் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கருத்துகளை கேட்டார்.

அனல் மின்நிலையத்தில் இருந்து கழிவு எவ்வாறு கலக்கிறது. அந்தக்கழிவால் கொசஸ்தலை ஆறு எவ்வாறு சாம்பல் சூழ உள்ளது என்பதையும் கமல்ஹாசன் பார்த்தார். இதே போன்று அந்தப் பகுதியில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அவர் நேரில் பார்த்தார். அப்போது அங்கு கூடிய அந்தப் பகுதி மக்கள் சுற்றுச்சூழல் மாசால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கமலிடம் கண்ணீர் விட்டனர்.

மீன்வளம் அதிக அளவில் இருந்த இந்தப் பகுதி தற்போது வாழத் தகுதியை இழந்து வருவதாகவும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு மக்கள் ஆளாவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர். ஏதாவது செய்து இந்த சுற்றுச்சூழல் மாசில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் கமல்ஹாசனிடம் கண்ணீருடன் கேட்டனர்.

tamil.oneindia.com