கமல் நடத்திய நாடகத்தால், மின் நிலைய கட்டுமான பணி பாதிப்பு?

நடிகர் கமலின் நடவடிக்கையால், எண்ணுாரில் அமைக்கப்பட்டு வரும், புதிய அனல் மின் நிலையங்களின் கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, 450 மெகாவாட் திறனில், எண்ணுார் அனல் மின் நிலையமும், அதன் அருகில், 1,830 மெகாவாட் திறனில், வட சென்னை அனல் மின் நிலையமும் உள்ளன. இதே மாவட்டம், வல்லுாரில், தேசிய அனல் மின் கழகம், மின் வாரியம் இணைந்து, 1,500 மெகாவாட் திறனில், மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளன.

இவை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின், மின் தேவையை பூர்த்தி செய்வதில்,முக்கிய பங்கு வகிக்கின்றன.

எதிர்கால மின் தேவையை சமாளிக்க, மின் வாரியம், எண்ணுார் விரிவாக்கம், எண்ணுார் சிறப்பு, வட சென்னை – 3 ஆகிய பெயரில், தற்போது, புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.

இவற்றின் கட்டுமான பணிகளின் திட்டச்செலவு, 20 ஆயிரத்து, 137 கோடி ரூபாய். நடிகர் கமலால், மேற்கண்ட மின் நிலையங்களின் கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மார்ச் முதல், எண்ணுார் மின் நிலையம் மூடப் பட்டது. வட சென்னை மின் நிலையத்தில், சாம்பல் வெளியேறும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அந்த கழிவுநீர், கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. ஆறு மாசடைந்ததால், சிலர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாம்பல் நீர், ஆற்றில் கலக்காமல் வெளியேற்ற, புதிய கட்டமைப்பு பணி நடக்கிறது. இந்தவிபரம், தீர்ப்பாயத்திலும் தெரிவிக்கப்பட்டது.

புதிய அனல் மின் நிலையம், மத்திய அரசின் விதிப்படி, சுற்றுச்சூழலை பாதிக்காமல், நவீன முறையில் கட்டப்படுகிறது. அப்படி இருந்தும், சிலர் பணம் பறிக்க, உள்ளூர் மக்களை துாண்டி விட்டு, போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், பணிகளை குறித்த காலத்தில் முடிக்க முடிய வில்லை. இந்நிலையில், நடிகர் கமல், கொசஸ்தலை ஆற்றில், வட சென்னை மின் நிலைய சாம்பல் கழிவு பிரச்னையை மீண்டும் எழுப்பியதோடு, எண்ணுாரில் ஆய்வு செய்து உள்ளார்.

இதை சாதகமாக பயன்படுத்தி, சிலர் மின் நிலையங்களுக்கு எதிராக, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. கள விபரங்களை தெரிந்து கொள்ளாமல், வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும் வகையில், கமலின் நடவடிக்கை அமைந்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

-athirvu.com