சென்னை : வெளிநாடுகளில் மட்டும் மெர்சல் படம் 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. அதாவது வெளிநாடுகளில் மட்டும் 72 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் ஆமிர்கானின் நடிப்பில் வெளியான ‘டங்கல்’, ஷாருக்கான் நடித்த ‘ராயிஸ்’, ராஜமௌலியின் பிரமாண்டத்தில் உருவான ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் மட்டுமே 10 மில்லியன் டாலர் வசூலைக் கடந்துள்ளன. இந்தப் பட்டியலில் மெர்சலும் இணைந்துள்ளது.
10 மில்லியன் டாலர் வெளிநாட்டு வசூல் இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனை. இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை வெளிநாடுகளில் விஜய்யின் ரசிகர்கள் ஆதரவைக் காட்டுகிறது.
வசூல் மழை
தமிழ்த் திரையுலகத்தில் இதற்கு முன் வேறு எந்தப் படமும் இப்படி ஒரு சாதனையைப் புரிந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு ‘மெர்சல்’ படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் அதிக வசூலைப் பிடித்த படம் என ‘எந்திரன்’ படம் முதலிடத்தில் இருக்கிறது.
எந்திரனை முந்திய மெர்சல்
சுமார் 280 கோடி வரை ‘எந்திரன்’ படம் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது படம் ஓடிய 100 நாட்களுக்கும் மேலான மொத்த வசூல். ஆனால், ‘மெர்சல்’ படம் 12 நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்து திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
செம கலெக்ஷன்
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஞாயிறுடன் 100 கோடி ரூபாய் வசூலித்த ‘மெர்சல்’ நேற்றுடன் உலகம் முழுவதுமான வசூலில் 200 கோடியைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் என்பது ‘எந்திரன், பாகுபலி 2’ ஆகிய படங்களுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. விரைவில் அந்தப் படங்களின் மொத்த தமிழ்நாடு வசூலையும் ‘மெர்சல்’ மிஞ்ச வாய்ப்புள்ளது.
அபிராமி ராமநாதன்
இதற்கிடையே, படங்களின் வசூல் பற்றி வினியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறிய வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வசூல் விபரம் படத்தை ஓடவைப்பதற்காக தியேட்டர் உரிமையாளர்களாக கிளப்பி விடுவதுதான் என அபிராமி ராமநாதன் சொல்லும் வீடியோ முன்பே வெளியாகி எடிட் செய்யப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது.
மெர்சல் வசூல்
சாதனை ‘மெர்சல்’ படத்தின் சென்னை விநியோகஸ்தராக இருக்கும் அபிராமி ராமநாதன், மெர்சல் படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது எனக் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ மெர்சல் படத்தைப் பற்றியதல்ல எனவும் தெளிவாகியிருக்கிறது.
அமெரிக்காவை அதிரவிடும் மெர்சல்
வெளிநாடுகளில் மொத்த வசூலாக 70 கோடியைக் கடந்துள்ளது. அதில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. பல வெளிநாடுகளில் ‘எந்திரன்’ படத்தின் மொத்த வசூலைத் தாண்டியும், நெருங்கியும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘மெர்சல்’. அமெரிக்காவில் மெர்சல் படம் நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களின் இன்னும் வெற்றிகரமாக ஓடிவருகிறது. USA-வில் 1.3 மில்லியன் டாலர், வட அமெரிக்காவில் 1.5 மில்லியன் டாலர் வசூலுடன் பல சாதனைகளைத் தகர்த்து வருகிறது.
சிங்கப்பூர் சாதனை
சிங்கப்பூரில் முதல் வாரத்திலேயே 1 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வசூலித்து சாதனை புரிந்தது மெர்சல். UAE நாடுகளில் முதல் வாரத்தில் 8 கோடி வரை வசூலித்தது. கோல்மால் அகெய்ன், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படங்களை அடித்து டாப்பில் இடம்பிடித்தது மெர்சல்.
யு.கே வசூல்
UK விஜய்க்கு வலுவான மார்க்கெட் இருக்கும் ஏரியா என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. 12 நாட்களிலேயே நாலைரைக் கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இன்னும் சில நாட்கள் ஓடினாலே இங்கும் ‘எந்திரன்’ படத்தின் வசூலை அடித்து நொறுக்கிவிடும். அதேபோல, முதல் நாள் வசூலில் 81 லட்சம் ரூபாய் வசூலித்து ‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூலையும் முறியடித்திருக்கிறது.
இலங்கையில் பெரிய வெற்றி
இலங்கையிலும் பெருவெற்றி பெற்றிருக்கிறது மெர்சல். முதல் 8 நாட்களிலேயே இந்திய மதிப்பில் நாலரைக் கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. மேலும், நியூசிலாந்து, நார்வே ஆகிய நாடுகளிலும் எந்தத் தமிழ்ப் படமும் பெறாத அளவுக்கு வசூலை எட்டியிருக்கிறது. இதற்கு முன்பு வரை சாதனையாக இருந்த பாகுபலி வசூலை பல நாடுகளில் முந்தியிருக்கிறது மெர்சல்.
பிற மாநிலங்களில்
தமிழகம் விடுத்து கேரள மாநிலத்தில் விரைவில் 20 கோடி ரூபாய் வசூலை ‘மெர்சல்’ கடக்க உள்ளது. கர்நாடகாவிலும் சுமார் 15 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. தெலுங்கில் இன்னும் படம் வெளியாகாததால் அந்தக் கணக்கு இன்னும் தொடங்கவேயில்லை.
300 கோடி டாவ்வ்வ்
விஜய் ரசிகர்கள் ‘மெர்சல்’ படம் 300 கோடியைத் தொடுமா என்றுதான் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரம் கடந்து ஓடினால் அந்த சாதனையும் நிகழ வாய்ப்பிருக்கிறது. மெர்சல் படத்தால் அடுத்து வரவிருக்கும் ரஜினி, அஜித் படங்களுக்கு இன்னும் வசூல் மைல்கல் அதிகமாகும்.