இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும் எதிர்ப்பு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

சென்னை: இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் சொல்ல முடியாத அளவுக்கு தீவிரவாதம் பரவியுள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை, பாஜக, சிவசேனை கட்சியினரை கோபமடையச் செய்துள்ளது.

தனது கருத்துக்கு, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

கமல் தனது கட்டுரையில் “எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி அவர்கள் (இந்துக்கள்) விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேளுங்க

இதுகுறித்து, பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “கமல்ஹாசன் இதற்காக மன்னிப்பு கேட்பதோடு தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். நிஜம் என்னவென்றால், இங்கு இந்துக்கள் பெரும்பான்மையின மக்களாக இருப்பதால்தான் அமைதி நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கதிதான் கமலுக்கு

சிவசேனை செய்தித்தொடர்பாளர் மனிஷா கயண்டே கூறுகையில், “இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியலுக்கு உதவாது. இந்து தீவிரவாதம் என்று பேசியதால்தான் காங்கிரஸ் இன்று அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

திராவிட கொள்கையாளர்களை ஈர்க்கவா?

இதுகுறித்து அரசியல்விமர்சகரும், பத்திரிகையாளருமான ஆர்.கே.ராதாகிருஷ்ணன் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்துத்துவாவுக்கு எதிரான எண்ணம் கொண்ட கணிசமான தமிழக மக்களிடம் அபிமானம் பெறும் முயற்சியில் கமல் ஈடுபட்டிருக்கலாம் என தோன்றுகிறது” என்று கூறியுள்ளார். அதிமுக, திமுக மீது நம்பிக்கை இல்லாத கணிசமான மக்களை ஈர்க்க கமல் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கூறுகிறார் அவர்.

நடிகர்களுடன் தொடர் மல்லுக்கட்டு

மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் சில சமீபத்திய அறிவிப்புகளுக்கு எதிராக வசனம் பேசப்பட்டு அதை பாஜக தலைவர்கள் எதிர்த்த சர்ச்சை இப்போதுதான் அடங்கியுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் கருத்தும், பாஜக தலைவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com