தமிழ் அகராதி தவிர்த்து, ஆள்பவர்கள் – வாழ்பவர்கள் அத்தனை பேரின் அடிமனதிலிருந்து அடியோடு துடைத்தெடுக்கப்பட்ட வார்த்தையை… எளிய மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்திருக்கிறார் இயக்குனர் கோபி நயினார் – ‘அறம்’!
டாப் ஹீரோக்கள் தவிர்த்து முன்னிலையில் இருக்கும் ஹீரோக்களுக்கு சற்றும் குறையாத சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை – சொல்லப்போனால் நடிகைகளில் சூப்பர் ஸ்டார். அந்த அடையாளங்களை முற்றிலுமாகத் தூக்கியெறிந்துவிட்டு… மக்களின் வாழ்வை நிஜத்துக்கு நெருக்கமாக நின்று பதிவு செய்யும் முயற்சிக்கு நயன்தாரா ஒப்புக்கொண்டது – இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று!
முப்பது ஆண்டுகளாக மூச்சைப் பிடித்துக்கொண்டு, முங்கு நீச்சல் அடித்துக்கொண்டிருந்த நல்ல படைப்பாளியைக் கைபிடித்துக் கரை சேர்த்ததற்கு ‘நன்றி’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது ‘அறம்’ அல்ல! .
பொதுவாக கூடுதல் பணம் சேர்ந்தபிறகு கோயில் உண்டியலில் காணிக்கை போடுவார்கள். நயன்தாரா, தன்னை வாழவைத்த சினிமாவுக்கே திருப்பி காணிக்கை செலுத்தியிருக்கிறார்! நல்ல சினிமா விரும்பும் மனிதர்கள் உள்ளவரை உங்கள் ‘அறம்’ நினைவில் கொள்ளப்படும்.
கார்பரேட் கைக்கூலிகளின் அடாவடித்தனத்தால், எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் துயரம்.. எதிர்காலம் சந்திக்கவிருக்கிற பேரழிவு என மக்களின் மனசாட்சியாக படம் முழுக்க காட்சிகள் விரிகின்றன.
படம் தொடங்கி சில நிமிடங்களில் படம் பார்க்கிற நம்மையும் அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கைக்குள் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது! அந்த மனிதர்களின் பேரன்பு…துயரம் அத்தைனையிலும் படம் பார்ப்பவரை சாட்சியாக நிற்கவைப்பது அவ்வளவு சுலபமில்லை? சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
படம் நெடுகிலும் ‘பொளேர்’ என்று அறைகிற வசனங்கள் உண்டு. ஆனால் எவரையும் காயப்படுத்தாமல்… அதிகார வர்க்கமே, அவமானத்தோடு ஒப்புக்கொள்ளும்படி காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.
உதாரணத்துக்கு ஒன்று- ஆழ்துளை கிணற்றுக்குள் மாட்டிக்கொண்ட குழந்தையை மீட்க அவளது அண்ணனை தலை கீழாக கயிற்றில் கட்டி உள்ளே இறங்குகிறார்கள். தைரியமாக இறங்கும் சிறுவன் ஒரு கட்டத்திற்குமேல் பயந்து அலறுகிறான். அலறியடித்துக்கொண்டு அவனை மேலே கொண்டுவந்து ஆசுவாசப்படுத்துகிறார்கள். நயன்தாரா அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு, “கொஞ்ச நேரம் இருட்டுல இருந்ததுக்கே இவ்வளவு பயப்படுறியே! உந்தங்கச்சி ஒருநாள் முழுக்க இருட்டுல இருந்திருக்கா… அவளை நீதானே வெளிச்சத்துக்கு கொண்டு வரணும்!?”
நயன்தாரா தவிர்த்து இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் முகங்கள் அனைத்தும் உங்களுக்கு வெவ்வேறு படங்களில் பார்த்த முகங்களாக இருக்கும். படம் பார்த்து முடித்தபின் இந்தப் படம் மட்டுமே சில காலங்களுக்கு உங்கள் நினைவில் நிக்கும்.
அறம்- மாற்று சினிமா; மக்களுக்கான சினிமா! – வீகே சுந்தர்