அரசியல் களத்தில் கமல்ஹாசன்: சாதிப்பாரா?

சுமார் இருபது – இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் ஒரு முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், நான் அரசியலுக்கு வந்தால் தவறு செய்பவர்களை எந்திரத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்; அதனால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று பதிலளித்தார்.

2017 நவம்பர் 7ஆம் தேதியன்று அவரது பிறந்த நாளில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, உங்களுடன் இருப்பவர்கள் தவறுசெய்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, என் படங்களில் தவறு செய்தவர்களை நான் என்ன செய்தேனோ அதைவிட கடுமையாக செய்ய வேண்டியிருக்கும் என்று பதிலளித்தார். ஆனால், ஒரே வித்தியாசம் அவர் தேர்தல் அரசியலில் அவர் நேரடியாக இறங்க முடிவெடுத்துவிட்டார் என்பதுதான்.

தமிழக திரைத் துறையிலிருந்து தமிழக அரசியலுக்கு வந்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் சினிமாத் துறையில் செயல்பட்டவர்கள் என்றாலும் அவர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தால் அரசியல் களத்தில் சாதித்தவர்கள் அல்ல. ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு அவர்களது சினிமா பிரபலம் மிக முக்கியமான முதலீடாக இருந்தது.

ஆனால், இவர்களுக்குக் கிடைத்த வெற்றி, இவர்களைப் பின்பற்றி சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலருக்குக் கிடைக்கவில்லை. எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகியோர் அரசியலில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில், ராமராஜன், எஸ்.வி. சேகர், எஸ்.எஸ். சந்திரன், நெப்போலியன் உள்ளிட்ட அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலரும் தமிழக கட்சிகள் எதிலாவது ஒன்றில் இணைந்தே தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆனால், தொன்னூறுகளின் துவக்கத்திலிருந்து தமிழின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களால் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வரான ஜெ. ஜெயலலிதாவை சில சந்தர்ப்பங்களில் அவர் கடுமையாக விமர்சித்ததே இந்த யூகங்களுக்கான அடிப்படை.

1996ல் வெளிப்படையாக தி.மு.க. – த.மா.காங்கிரஸ் கூட்டணியை அவர் ஆதரித்தார். 2004ல் வெளிப்படையாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பங்களைத் தவிர, அவர் அரசியல் குறித்து வெளிப்படையாக பேசிய தருணங்கள் மிகவும் குறைவு.

இருந்தபோதும் கடந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து அவரது அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. 2016ஆம் ஆண்டின் இறுதியில் அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்தபோது மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியெழுந்தது. ரசிகர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, போர் வரும்போது களத்தில் இறங்க வேண்டும் என்று மட்டும் சொன்னார்.

-BBC_Tamil