சென்னை: பாலிவுட்டை தனது கைக்குள் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் போல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கோலிவுட்டை தனது கைக்குள் வைத்திருக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அன்புச்செழியன்’ சினிமாத்துறையில் இந்த பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லையாம். சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளருமான அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர். அன்புச்செழியனின் கொடுத்த நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் அசோக்குமார் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சினிமாத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் இன்று அன்புச்செழியனின் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது.
சினிமா பைனான்சியர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு கேட்ட நேரத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வரும் சினிமா பைனான்சியர்.
வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து
எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கேட்ட சில மணி நேரத்திலேயே கிடைக்கும் என்பதால் அன்புச்செழியனை சினிமாத்துறையில் உள்ளவர்கள் பகைத்துக்கொள்ளமாட்டார்களாம். பணம் கொடுக்கும் முன்பே நிரப்பப்படாத காசசோலையில் கையெழுத்து வாங்குவது, வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து பெறுவது இவரது பாலிசி.
அனைத்து படங்களிலும் பங்களிப்பு
மேலும் இவர் பைனான்ஸ் செய்யும் படத்தின் வசூலிலும் இவருக்கு பெருமளவு ஒதுக்க வேண்டும் என்பது அன்புச்செழியனின் விதிகளுள் ஒன்று. வெளிவரும் அனைத்து படங்களிலும் அன்புச்செழியனின் பங்களிப்பு இருக்க வேண்டுமாம்.
தம்பியின் துணையுடன் உள்ளடிவேலைகள்
அதற்காக திரைமறைவில் பல உள்ளடி வேலைகளை பார்ப்பாராம் அன்புச்செழியன். அதற்கு படியாதவர்கள் மற்றும் கேட்கும் பணத்தை கொடுக்காதவர்களின் வீட்டு பெண்களை தனது தம்பி அழகரின் துணையுடன் தூக்குவதும், கடத்தி மானபங்கப்படுத்துவதும் அன்புச்செழியனின் ஸ்டைலாம்.
கோலிவுட்டை கட்டுப்படுத்த..
அதுமட்டுமல்லாமல் பாலிவுட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் போல கோலிவுட்டை கட்டுப்படுத்தி தனது கைக்குள் வைக்க முயற்சி செய்தாராம். இதற்காக படங்களை ரிலீசாக விடாமல் முடக்குவது போன்ற பல வேலைகளை செய்துள்ளார்.
அன்பே இல்லாத அன்புச்செழியன் நாயகன், தளபதி, மவுனராகம் போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் ஜிவியின் தற்கொலைக்கு காரணமானவரும் இந்த அன்புச்செழியன் தான். தற்போது தனது கந்துவட்டி பசிக்கும் பேராசைக்கும் தயாரிப்பாளர் அசோக்குமாரின் உயிரையும் பறித்துள்ளார் கொஞ்சம் கூட அன்பே இல்லாத அன்புச்செழியன்.