கல்யாணத்திற்கு சென்ற இடத்தில் சமையல்காரரை ஹீரோவாக்கிய ஜோக்கர் இயக்குனர்

சென்னை: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் சமையல் கலைஞரை பார்த்த இயக்குனர் ராஜு முருகன் அவரையே தனது படத்தின் ஹீரோவாக்கிவிட்டார். ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் குறித்து ராஜுமுருகன் கூறியதாவது,

கதை

“எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம்.

திருமணம்

பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும் சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம். அங்கே திருமண விழாவில் சாப்பாடு நன்றாக இருந்தது.

ரங்கா

இந்த அற்புதமான உணவுக்கு காரணமான சமையல்கலை நிபுணரான ரங்காவை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவரைப் பார்த்து பேசிய தருணத்தில் சட்டென்று இவர் நமது கதைக்கு சரியாக இருப்பாரோ என்று தோன்ற நான் சரவணன் ராஜேந்திரனைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். இருவருக்கும் பிடித்துப்போக அவரிடம் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா என்று கேட்டோம். முதலில் தயங்கிய ரங்கா சிறிய மௌனத்திற்க்கு பின் ஒப்புக்கொண்டார். இப்போது அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார் என்றார் ராஜுமுருகன்.

ஷான் ரோல்டன்

இந்தப் படத்தின் நாயகி ஸ்வேதா திரிபாதி. இசை ஷான் ரோல்டன். கேமரா- மாநகரம் செல்வம். ஆர்ட் டைரக்‌ஷன்- சதீஷ். ஸ்டண்ட் – பில்லா ஜெகன். இந்த படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற படத்துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குடும்பத்தினர், ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வாழ்த்தினர்.

tamil.filmibeat.com