ஆர்.கே.நகர்: குழப்பங்களின் இறுதியில் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வேட்பு மனு முன்மொழிந்த கடிதத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றி கையெழுத்து போடப்பட்டுள்ளதாக புகார் கடிதத்தின் அடிப்படையில் வேட்பு மனு நிகாரிக்கப்பட்டுள்ளதாக வேலுச்சாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததால் காலியான அவரது சட்டமன்றத் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 27ஆம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது.

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதிவரை வெறும் 30 வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி நாளான டிசம்பர் 4ஆம் தேதியன்று 145 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதற்காக, வரிசையில் நின்று, டோக்கன் பெற்று இரவு வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோரும் கடைசி நாளான நான்காம் தேதிதான் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

டிசம்பர் ஐந்தாம் தேதியன்று காலை பத்து மணிக்கு வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் துவங்கின. முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

நடிகர் விஷாலின் வேட்பு மனுக்களில் பல தகவல்கள் சரியாக இல்லையென்றுகூறி தி.மு.கவும் அ.தி.மு.கவும் அவரது மனுவை ஏற்க எதிர்ப்புத் தெரிவித்தன. அதனால், அவரது மனு மீதான பரிசீலனை தள்ளிவைக்கப்பட்டு, பிற மனுக்களின் பரிசீலனை தொடங்கியது.

இதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, படிவம் 26ஐப் பூர்த்திசெய்து வழங்கவில்லையென்பதால் அவரது மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும் அவரது மனு, சரியாக நிரப்பப்படவில்லையென்றும் கூறப்பட்டது.

பிறகு மாலையில் மீண்டும் விஷாலின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வேட்புமனுவில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த பத்து பேரின் பரிந்துரை தேவைப்படும் நிலையில், விஷாலுக்குப் பரிந்துரை அளித்த இருவர், தாங்கள் அதைச் செய்யவில்லையென்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவரது மனு நிராகரிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இந்தத் தகவலை அறிந்த நடிகர் விஷால் தனது ஆதரவாளர்களுடன் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை, மண்டல அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று தேர்தல் அலுவலருடன் பேச வைத்தனர்.

அப்போது, தனக்கு பரிந்துரைத்துக் கையெழுத்திட்ட வேலு என்பவரை அ.தி.மு.கவின் வேட்பாளர் மதுசூதனனின் ஆதரவாளர்கள் மிரட்டியதாகக் கூறி தொலைபேசி ஆதாரம் ஒன்றை விஷால் வெளியிட்டார்.

இதற்குப் பிறகு, தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கோனியுடன் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி விவாதித்தார்.

தாக்கல் செய்யப்பட்ட 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறிய தேர்தல் அதிகாரிகள், விஷாலின் மனு பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகார்ப்பூர்வமாக அறித்துள்ளனர்.

-BBC_Tamil