சத்யா திரை விமர்சனம்

சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகே ஒரு ஹிட் கொடுப்பதற்காக தடுமாறி வருகின்றார். எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வரும் இவருக்கு இந்த சத்யா அப்படி ஒரு இடத்தை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

சிபிராஜ் ஆஸ்திரேலியாவில் பெரிய சாப்ட்ஃவேர் கம்பெனி ஒன்றில் வேலைப்பார்த்து வருகின்றார். திடிரென்று ஒரு கால் அவருடைய வாழ்க்கையை திருப்பி போடுகின்றது, அது தான் இப்படத்தின் ஒன் லைன்.

ரம்யா நம்பீசன் சிபிராஜின் முன்னாள் காதலி, ஒரு நாள் சிபிக்கு போன் செய்து என் மகளை கடத்திவிட்டார்கள், உன்னை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியவில்லை, ஏதாவது செய் என்று அழுகிறார்.

அதை தொடர்ந்து சிபி சென்னை வந்து இதை கண்டுப்பிடிக்க முயற்சி செய்ய, பிறகு தான் தெரிகின்றது, அப்படி ஒரு குழந்தையே இல்லை, ரம்யா நம்பீசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று.

ஆனால், ரம்யா கடைசி வரை தனக்கு குழந்தை இருப்பதாக சொல்ல, அந்த குழந்தை உண்மையாகவே உள்ளதா? இல்லை ரம்யாவிற்கு தான் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை மிக சுவாரஸ்யமாக கூறியுள்ளார் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி.

படத்தை பற்றிய அலசல்

சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து ஒரு தரமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். காதலியை பிரியும் இடத்திலும் சரி, தன் முன்னாள் காதலி மகள் கடத்தப்பட்டாள் என்று தெரிந்து அவருக்காக அலையும் இடத்திலும் சரி சிபி நடிப்பில் பல மடங்கு முன்னேறிவிட்டார்.

சிபியை தாண்டி படத்தில் சதீஷ், ஆனந்த்ராஜ் மிகவும் கவர்கின்றனர். அதிலும் சதீஷ் காமெடியை விட குணச்சித்திர கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இனி இதுபோன்ற கதாபாத்திரங்கள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை, அதை விட ஆனந்த்ராஜ் ஒவ்வொரு படங்களிலும் சிக்ஸர் அடிக்கின்றார்.

இசை வெளியீட்டு விழாவில் ஆனந்த்ராஜ் சொன்னது போலவே சத்யராஜை மனதில் வைத்தே தான் வசனம் எழுதியிருப்பார்கள் போல. அத்தனை நக்கல் அவர் பேசும் வசனங்களில், வரலட்சுமி சில காட்சிகள் வந்தாலும் சர்ப்ரைஸ் கொடுக்கின்றார்.

படம் முழுவதும் ஒரு குழந்தையை தேடும் கதை, அதை விட குழந்தை இருக்கின்றதா? என்ற சந்தேகத்தையும் கடைசியில் ஒவ்வொரு முடிச்சுக்களையும் அவிழ்க்கும் போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லை என்றாலும், கிளைமேக்ஸ் கொஞ்சம் யதார்த்தம் விலகியே உள்ளது. சிபியும் ஏதோ இண்டர்நேஷ்னல் போலிஸ் போல் அசால்ட்டாக எல்லாத்தையும் செய்து முடிப்பது, அதைவிட போலிஸிற்கே இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என சொல்வது கொஞ்சம் ஓவர்.

படத்தின் மிகப்பெரும் பலம் பின்னணி இசை, சைமனின் இசையில் படத்தின் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கின்றது. கூடவே அருண்மணி பழனியின் ஒளிப்பதிவும் அதற்கு உதவுகின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, கடைசி வரை சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துள்ளனர்.

ஆனந்த்ராஜ், சிபிராஜ், சதீஷ் ஆகியோரின் நடிப்பு.

கடைசி வரை டுவிஸ்ட்டை கொண்டு சென்ற விதம்.

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் நல்ல டுவிஸ்ட் என்றாலும், கொஞ்சம் யதார்த்தம் விலகியே உள்ளது.

மொத்தத்தில் குழந்தையை சத்யா கண்டுப்பிடித்தாரா என்பதை விட வெற்றியை கண்டுப்பிடித்துவிட்டார்.

-cineulagam.com