அருவி – திரை விமர்சனம்

அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அதிதி பாலன், தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவரிடம் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அதிதிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சியடையும் அதிதியின் பெற்றோர் அதிதியை வெறுத்து ஒதுக்குகின்றனர். தமது மகள் தவறான வழிக்கு போனதால் தான் அவளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக நினைத்து ஒரு கட்டத்தில் அதிதியை வீட்டை விட்டே துரத்திவிடுகின்றனர். பின்னர் மேன்சன் ஒன்றில் திருநங்கை ஒருவருடன் தங்குகிறார்.

பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்ட, போலீசாரால் கைது செய்யப்படுகிறார். பின்னர் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்ட அதிதியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதில் தனது வாழ்க்கையில் நடந்தது குறித்து கூறும் அதிதி, அதனை போலீசில் சொல்கிறார்.

இவ்வாறாக வீட்டை விட்டு வெளியேறியது முதல் அதிதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? என்னென்ன தொல்லைகளுக்கு உள்ளானார்? அவருக்கு எச்.ஐ.வி. தொற்று எப்படி வந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

அருவி என்ற கதாபாத்திரத்தில் அதிதி பாலன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பு தான் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக படத்தின் முடிவில் எச்.ஐ.வி. பாதித்த பெண்ணாக, அதிதியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அதற்காக அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். மொத்த படத்தையே தனது தோளில் தாங்கிச் செல்கிறார். லக்‌ஷ்மி கோபாலசாமி, ஷிவதா நாயர், ஸ்வேதா சேகர் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்த ஒருவரின் வாழ்க்கை, வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஒரு பெண் என்னென்ன இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். என்றாலும் கதைக்கு ஏற்ப திரைக்கதையின் போக்கை அமைக்காமல், கமர்ஷியல் வாசம் வீச வேண்டும் என்பதற்காக இணைத்திருக்கும் காட்சிகள் படத்தின் போக்கை மாற்றுகிறது. வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

-tamilcinema.new