எடப்பாடியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!

‘ஞாயிறு’ நக்கீரன்- சென்னை இராதாகிருஷ்ணன்(ஆர்.கே.) நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து  டி.டி.வி. தினகரன் வென்றதாக முடிவு அறிவிக்கப்பட்டாலும் சரி; அல்லது இரண்டாவது சுற்று நிறைவுறும் தறுவாயில் தமிழக ஆளுந்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தைப் போல இன்னொரு முறை கலவரம் நிகழ்ந்து  இன்னொரு முறையும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலும் சரி.

ஒருவேளை அப்படி மறு கலவரம் நடந்து அதன் விளைவாக வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து முடக்கப்பட்டாலும் சரி; அல்லது தேர்தல் ஆணையத்தால் வாக்குப் பதிவே தள்ளுபடி செய்யப்பட்டாலும் சரி; இடைப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கூட்டு கூட்டுத் தலைமையில் செயல்படும் தமிழக அரசு எப்படியும் அதன் முடிவை நெருங்குகிறது என்பது உண்மை.

தினகரன் வென்றதாக அறிவிப்பு வெளியானால், அது ஆளுந்தரப்புக்கு, குறிப்பாக முதல்வர் பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாகும். அவருடன் பன்னீர், கே.பி.முனுசாமி, இ.மதுசூதனன், தனபால் உள்ளிட்ட தரப்பினருக்கும் பாதகமாகும். இன்னும் குறிப்பாக, ஜெயக்குமாரின் வாயாடித்தனத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி ஏற்படும்.

பழனிசாமி, பன்னீர் கூட்டணியிடம் அதிகாரம் இருக்கிறது; காவல் துறை இருக்கிறது. பண பலம் இருக்கிறது. இத்தனையையும் மீறி, பண வலிமை ஒன்றினால் மட்டும் தினகரன் வெற்றி பெறுகிறார் என்றால், பன்னீர் – பழனி தரப்பின் அதிகார பலமும் காவல் துறையும் சோடையுற்றுள்ளன.

ஆக, தினகரன் தரப்பு, இந்த இடைத் தேர்தல் வெற்றி மூலம் தற்காலிக வலிமை பெறுவதால், அதன் எதிர்வினையாக பன்னீர் – பழனித் தரப்பு பலவீனம் அடையக்கூடும். சட்டமன்ற உறுப்பினர்கள் சொற்ப எண்ணிக்கையில் இடம் மாறினாலும் நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பன்னீர் – பழனி தரப்பு பராமரிக்கும் தமிழக நிர்வாகம் நிலைகுலையலாம்;

ஒருவேளை வாக்கு எண்ணிக்கை தடைபட்டு, இரண்டாவது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டாலும், அதன் பக்க விளைவு பன்னீர் – பழனி கூட்டணிக்குத்தான் ஏற்படும்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை நடத்த முடியாமல் இரு முறை இடைநிறுத்தினால், ஒரு மாநில அரசுக்கு அதைவிட இழுக்கு வேறொன்றும் இல்லை என்று கூறி, மத்திய அரசு இந்த(தமிழக) மாநில அரசை கலைக்கலாம். அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய பன்னீர் – பழனி கூட்டுத் தலைமை தொடர தொடர. அது, பாஜக-விற்கு பாதகமாகவே அமைகிறது. தமிழ் நாட்டில் பாஜக-விற்கான ஆதரவும் செல்வாக்கும் குறைந்து கொண்டே வருவதை அதன் தேசிய தலைமையும் உணர்ந்துள்ளதால் மத்திய பாஜக அரசும் ஒரு முடிவுக்கு வரலாம்.

மொத்தத்தில் பன்னீர் – பழனித் தரப்பின் கூட்டுத் தலைமை முடிவை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.