திரைப்படங்களில் காட்டப்படும் ரஜினி நிஜத்தில் இல்லை: பினாங்கு ராமசாமி சாடல்

ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் ராமசாமி, ரஜினியின் இந்த கருத்து குறித்தும், அவரது முந்தைய செயல்பாடுகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் சில விமர்சனங்களைதெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், ”தமிழ்நாட்டுக்கு ஒரு புதுவிதமான அரசியல் தேவை என்றும், குறிப்பாக ஆன்மிக அரசியல் தேவை என்றும் ரஜினி கூறுகிறார்” என்று பி. ராமசாமி குறிப்பிட்டார்.

பல கேள்விகளை எழுப்பும் ‘ஆன்மிக அரசியல்’

”அரசியலில் இறங்கப் போவதாக கூறும் ரஜினி, ஆன்மிக அரசியல் என்று கூறும்போது அது பல கேள்விகளை எழுப்புகிறது. இது தொடர்பான கேள்விகளையே நான் எழுப்பினேன்” என்று அவர் தெரிவித்தார்.

சாதி, மத பேதமற்ற அரசியல் இது என்று ரஜினி கூறுகிறார். ஆனால், அந்த பதிலில் எனக்கு திருப்தியில்லை என்று ராமசாமி மேலும் கூறினார்.

”ஆரம்பத்தில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கபட்ட சமயத்தில் ரஜினி அரசியலில் நுழையவில்லை. தற்போது அரசியலில் இறங்கப் போவதாக கூறும் ரஜினிகாந்த் வாய்ப்பு கிடைத்தால் சில திட்டங்களை நிறைவேற்றப் போவதாக கூறுகிறார். ஆனால், அந்த திட்டங்கள் எவை என்று அவர் கூறவில்லை. மேலும், நல்லாட்சி போன்றவை குறித்தும் அவர் பேசவில்லை” என்று ராமசாமி தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பும், தமிழகத்தில் பாஜக காலூன்ற செய்யும் முயற்சிகளுக்கும் தொடர்புள்ளதா என்று அவர் வெளிப்படுத்திய சந்தேகம் குறித்து கேட்டபோது, ‘இவ்விரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம். உறுதியாக கூறமுடியாவிட்டாலும் , இதற்கு வாய்ப்புள்ளது” என்று ராமசாமி கூறினார்.

‘தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பாஜக வலுவாக இல்லை. ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளிவரும் இந்நிலையில், பாஜக செய்யும் முயற்சிகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

‘தமிழர்களின் பிரச்சனைகளில் குரல் கொடுக்காத ரஜினி’

தமிழர்கள் தொடர்பான பல பிரச்சனைகளில் ரஜினி குரல் எழுப்பவில்லை என்று கூறிய பினாங்கு மாநில துணை முதல்வர் மேலும் பேசுகையில், ” இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பல நடிகர்கள் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். பெரிய அளவில் ஒன்றும் செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு குரல் கொடுத்தனர்” என்று குறிப்பிட்டார்.

”ஆனால், அதேவேளையில் கர்நாடகாவில் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட போது இவர் குரல் கொடுத்தாரா? ஈழ தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை?” என்று ராமசாமி வினவினார். ரஜினியின் முதலீடு எல்லாம் கர்நாடாகாவிலும், சம்பாத்தியம் தமிழகத்திலும் உள்ளது என்றார் அவர்.

தமிழக அரசியல் களத்தில் ரஜினியின் தாக்கம்

திரைப்படங்களில் வெகுஜனங்களின் பாதுகாவலராக ரஜினி காட்டப்படுகிறார். நல்லது செய்வதாக காட்டப்படுகிறது. ஆனால், செயலில் அது அறவேயில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்டதற்கு, ”ரஜினிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால், அவரது கபாலி திரைப்படத்துக்கு கிடைத்த அதிக வரவேற்பு ஏன் என்று எனக்கு புரியவில்லை” என்று ராமசாமி குறிப்பிட்டார்.

நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவன். அந்த படத்தில் மலேசியாவில் உள்ள உண்மை நிலை அதிகமாக பிரதிபலிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

”தமிழக அரசியல் சூழலில் அவருக்கு எந்தளவு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று பேராசிரியர் ராமசாமி கூறினார். -BBC_Tamil