என் சினிமா வேலைகளை முடித்து விட்டு விரைவில் அரசியலுக்குள் வருவேன்- கமல்ஹாசன்

சென்னை,

புதிய புயலாக நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் செய்துள்ளார். தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து வரும் அவர் 14-ந்தேதி பொங்கலன்று புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கி இருப்பதால், நடிகர் கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் கட்சித் தொடங்குவாரா என்ற சந்தேகம் கணிசமானவர்களிடம் உள்ளது. அதற்கு விடை அளிப்பது போல தற்போது கமல்ஹாசன் கருத்துகள் வெளியிட்டுள்ளார். வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் அவர் அதில் கூறி இருப்பதாவது:-

டுவிட்டரில் அடிக்கடி அரசியல் பற்றிக் கோபப்பட்டுக் கீச்சிக் கொண்டிருப்பது மட்டுமே என் வேலையன்று. ஆமாம், அந்தக் கோபத்தை வெறும் கோபமாக மட்டுமே வைத்திருப்பதிலும் அர்த்தமில்லை. அதைக் கட்டுப்படுத்தி, விவேகத்தோடு செயலாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் போது இனி அதிகம் பேசிப்பயனில்லை. ‘இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்’ என்பதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் தொடர்ந்து சொல்லிக் கொண்டு மட்டுமே இருப்பதில் அர்த்தம் இல்லை.

‘நாங்கள் எந்தப் பாதையில் நடப்பது என்று தெரியவில்லை’ என்று அவர்கள் சொன்னால் நான் பாதையைக் காட்டலாம். அதே பாதை கொஞ்சம் கரடுமுரடாக இருக்கிறதே என்றால் நான் அவர்களுக்குச் செருப்பாகலாம். இவ்வளவு தான் நான் பண்ண முடியும்.

மீம்ஸ் போட்டு, ட்வீட் போட்டுக் கிண்டலடிக்க வேண்டிய நேரங்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ட்வீட் பண்ண என் கைகள் துடிக்கின்றன. கோபத்தில் வந்த வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்வார்கள் என்பதால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். இப்போது நான் செய்து கொண்டிருப்பது எல்லாம், என் சினிமா வேலைகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதுதான்.

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ என்று சொல்வதை அமெரிக்காவில் மிகப்பெரிய சோகமாகப் பார்க்கிறார்கள். என் முடிவை மாற்றி சினிமாப்பக்கமே என்னை மீண்டும் மடைமாற்ற, எல்லோரும் என்னையும் என் கலையையும் வியந்து வியந்து பேசுகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள நல்ல தொழில் வாய்ப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். ‘இங்கே வந்துவிடுங்கள்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், எனக்கப்படித் தோன்றவில்லை. பரமக்குடியில் பிறந்த பையன், எப்படி சென்னைக்கு வந்தேனோ அப்படித்தான் இந்த சினிமா அரசியல் பயணத்தைப் பார்க்கிறேன். அவ்வளவுதான்.

ஆனால், என்ன மாதிரியான அரசியல், எப்படிப்பட்ட அரசியல் என்பதெல்லாம் முக்கியமே கிடையாது. அரசியலுக்கு வரும் அவலத்துக்கு என்னை மாத்திரமன்று, தமிழக மக்களையும் ஆளாக்கி விட்டார்கள். இப்போது எல்லோரும் வந்துதான் ஆகவேண்டும்.

‘எல்லோரும் அரசியலுக்கு வரும் போது, நானும் வருவேன்’என்று பழைய பேட்டிகளில் பல முறை சொல்லியிருந்தேன். அதையே தான் மறுபடியும் சொல்கிறேன். எல்லோரும் வரவேண்டிய சமயம் வந்துவிட்டது.

எல்லோரும் அரசியலில் புகுந்து நல்லுணர்வோடு, நேர்மையோடு செயல்பட வில்லை என்றால், உங்களுக்கு நிகழப்போகும் விபத்துகள், அபாயங்கள் எல்லாவற்றுக்கும் நீங்கள் தகுதியானவர்கள். ‘நீ என்ன பெரிய ரிஷியா, சாபம் கொடுக்குற’ என்று கேட்கலாம். சாபம் கொடுக்கவில்லை, வரும்முன் சொல்கிறேன்.

இன்று தமிழக மக்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள். அவர்களை என்ன பண்ணியாவது துயிலெழுப்பி, ‘நடிக்காதே, வா… இது உன்னுடைய வேலையும்தான்’ என்று கூட்டிக் கொண்டு போக வேண்டிய வேலையில் அவனுக்கு முன்னதாக எழுந்த சக மனிதர்கள், சக தோழர்கள் அனைவருக்கும் பங்குண்டு. இந்த முயற்சியில் தோற்றாலும் வெற்றிதான்.

எல்லா நேரங்களிலும் ரூபாய் வெல்வது என்பது நடக்காது. ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு வாழ முடியாது. என்னுடைய ஆதங்கமும், அவமானமும் தாங்கொணாதது. மண்ணில் தலைபுதைக்கும் நேரம் இதுவன்று. எழுந்து தலையைச் சிலுப்பிக் கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒருவரை ஒருவர் எழுப்பிவிட வேண்டும்.

அவர்களுடைய வறுமை, தவறுகளையெல்லாம் செய்ய வைக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்கச் செய்வதற்கு, திருடர்கள் திருடுவதை இல்லாமலேயே போக வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் அள்ளிக் கொண்டு இருந்ததில் 50 சதவீகிதம் குறைத்துக் கொண்டால் தமிழகம் முன்னேறிவிடும்.  ஓட்டுக்கு லஞ்சமாக மக்களுக்குக் கொடுக்கக் கூடிய பணத்தை மக்களுக்கு அவர்கள் அர்ப்பணித்தாலே போதும், தமிழகத்தின் பாதி சோகங்கள் தீர்ந்துவிடும். இதுதான் நிஜம்.  இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

-dailythanthi.com