ரஜினிகாந்துடன் மோதலுக்கு கமல்ஹாசன் தயார் ஆகிறார் தனிக்கட்சி விரைவில் அறிவிப்பு

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக சில மாதங்களுக்கு முன்னால் அறிவித்து சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வந்தார். ஆளும் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதாக எச்சரிக்கை விடுத்து நேரில் அதனை ஆய்வு செய்து களத்திலும் இறங்கினார்.

இதனால் அமைச்சர்களுக்கும், கமல்ஹாசனுக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டார். தனிக்கட்சியை அறிவிக்கவும் தயாராகி வந்தார். ஏற்கனவே கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவை முடிவாகி விட்டது. பாதியில் நிற்கும் விஸ்வரூபம்-2, சபாஷ்நாயுடு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அரசியலில் குதிக்க முடிவு செய்து இருந்தார்.

2 படங்கள்

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு சபாஷ்நாயுடு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய அவர் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படப்பிடிப்புகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவேதான் இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் தாமதம் ஏற்பட்டது.

தற்போது இவற்றின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங் கப்பட்டு இரவு பகலாக நடந்து வருகின்றன. அமெரிக்காவில் முகாமிட்டு கமல்ஹாசன் நடித்து வந்தார்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அரசியல் பிரவேசத்தை அறிவித்தது கமல்ஹாசன் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து கமல்ஹாசன் இன்று அவசரமாக சென்னை திரும்பி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தால் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது தாமதப்படுமா? என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் மறுத்தார். “தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவதில் கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார். விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார்” என்றார்.

சினிமாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ஆரம்ப காலகட்டங்களில் ரஜினிகாந்த் வில்லனாக வந்தார். 1975-ல் கமல்ஹாசன் நடித்த அபூர்வராகங்கள் படத்தில்தான் முதல் முறையாக ரஜினிகாந்த் சிறிய வேடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், தாயில்லாமல் நானில்லை, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தார்கள்.

மோதல்

சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் மோதினார்கள். இப்போது அரசியலிலும் இருவரும் மோத தயாராகிறார்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கொள்கை ரீதியாக அவரை எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார்.

அவருக்கு போட்டியாக கமல்ஹாசனும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துவார் என்று தெரிகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் இருவரின் மோதலால் அனல் பறக்கும் என்கின்றனர்.

அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளுடன் இருவரும் கூட்டணி அமைக்கமாட்டார்கள் என்றே தெரிகிறது.

மலேசியாவில்…

தென்னிந்திய நடிகர் சங்கம் 6-ந் தேதி மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இதில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் முடிவுகளால் இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்பார்களா? சந்தித்து பேசுவார்களா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

-dailythanthi.com