அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துகள் ஆனால் கிடா விருந்து கூடாது: ரஜினிக்கு பீட்டா அறிவுரை

ரஜினி அரசியலில் நுழைந்தது மகிழ்ச்சி என்றும், ஆனால் அவருடைய பெயரில் நடத்தப்படும் ஆடு பலியை நிறுத்த வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையிலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த. அப்போது பேசிய அவர், மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் இங்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் ஆனால் இது சைவ மண்டபம் என்பதால் வேறு இடத்தில் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதாகவும் ரசிகர்கள் மத்தியில் ரஜினி தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி, தான் தனி கட்சி தொடங்கப் போவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி இடப்போவதாகவும் அறிவித்தார் ரஜினி.

ரஜினிகாந்தின் கிடா விருந்து ஆசையை நிறைவேற்றும் விதமாக மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க அம்மாவட்ட ரஜினி ரசிகர்கள் முடிவு செய்தனர்.

வரும் 7 ஆம் தேதி மதுரை அழகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சுமார் 1,000 ரஜினி ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து படைக்க மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், பீட்டா கிடா விருந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து கூறியுள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ள பீட்டா, ரஜினியின் பெயரால் நடத்தப்படும் கிடா விருந்தை ரஜினி நிறுத்த வேண்டும் என்றும், ஆடுகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன அதற்கும் உதவுங்கள் என்றும் அறிவுரை கூறியுள்ளது. -BBC_Tamil

கிடா வெட்டு கிடையாது.. ஆனா விருந்து உண்டு! – மதுரை ரஜினி ரசிகர் மன்றம்

மதுரை: மதுரையில் நாளை மறுதினம் 100 ஆடுகளை வெட்டி கிடா விருந்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த ரஜினி ரசிகர்கள், அதில் ஒரு மாற்றம் செய்துள்ளனர். ஆடுகளை வெட்டுவதை நிறுத்திவிடுவதாகவும், ஆனால் கறி விருந்து மட்டும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததை வரவேற்றுக் கொண்டாடும் வகையில் மதுரையில் 100 ஆடுகளை வெட்டி கறி விருந்து தர மதுரை ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த தகவல் வெளியானதும், பீட்டா அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பொது இடத்தில் 100 ஆடுகளை வெட்டுவது சட்ட விரோதம்… எனவே தடுத்து நிறுத்துமாறு ரஜினிக்கு கடிதம் எழுதினர்.

ரஜினி இப்போது மலேசியாவில் உள்ளார். இந்தக் கடிதத்துக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை ரஜினிகாந்த். ஆனால் மதுரை ரசிகர்கள் இப்போது புதிய முடிவை எடுத்துள்ளனர். திட்டமிட்டபடி ஜனவரி 7-ம் தேதி கறி விருந்து நடத்துவதென்றும்,

ஆனால் 100 ஆடுகளை வெட்டும் திட்டத்தைக் கைவிடுவதாகவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tamil.filmibeat.com