கேள்விகள் கேட்போம் – பதில்களின் பலத்துடன்

இசைஞானி இளையராஜாவை விட இயக்குநர் பா.இரஞ்சித் உயர்ந்தவர், புரட்சியாளர் என்று சித்தரித்து உலாவும் பதிவுகளை கண்டு சிரிப்பாய் இருக்கிறது. இரஞ்சித் மக்களுக்கான மனிதன் மட்டுமே. அப்படித்தான் அவரை உள்வாங்கிய அளவும்  நான் கண்டு உணர்கிறேன்.

அதே சமயம் இளையராஜா அதைசெய்யவில்லை இதை செய்யவில்லை என்றெல்லாம் பினாத்துவது கூட வயிற்றெரிச்சல்களின் வெளிப்பாடு தான். இந்த வயிற்றெரிச்சல்களை இரஞ்சித் மீதும் படரவிட்டு பரவசமடைந்த சமூகமிது. இரஞ்சித் மீது தூவாத காழ்ப்புணர்சிகளா என்ன?. தாயும் பிள்ளையுமாய் இருக்கும் உறவுகளை எவ்வளவு இலகுவாகவும் புத்திசாலித்தனமாகவும் நேரெதிர் துருவங்களாய் வடிவமைக்கிறீர்கள். சுகம் காண்கிறீர்கள்.முகாந்திரமே இல்லாத விசயங்களுக்காய் நீங்கள் விரயமாக்கும் எல்லாவற்றையும் பயனுள்ளவைகளின் மீது பிரயோகித்தால் எவ்வளவு இன்பமாய் இந்த சமூகம் மகிழ்ந்திருக்கும். அதைவிட்டு தங்களது சுயநமைச்சலுக்காய் பிறரை சொரிந்து மகிழ்வது பெருந்துன்பமும்,பேரபத்தமும் கூட. யார் மகிழ்ந்தாலும் அதை பொறுத்துக்கொள்ளமுடியாத இப் பொதுச்சமூகத்தில் இதை எதிர்ப்பார்ப்பது கூட என் பேராசை தான்.

மீடியாக்களின் பசிக்காக உருவாக்கப்பட்ட ஒரு தலைப்பிற்கும் அதற்கு சப்பைக்கட்டு கட்டியவர்களின் கேள்வி பதில்களுக்கும் தோழர் இசையரசு Isaiarasu Ambetkar ஒரு எதிர் பதிலை தந்தும்,  வெவ்வேறு தளங்களுக்குமான கேள்விகளுக்கு வெவ்வேறு விதமான பதில்களை தந்தும் கடந்து செல்கிறார். அவருடைய பதில்கள் இளையராஜாவிற்கு எதிரானவையோ இரஞ்சித்திற்கு ஆதரவானவையோ அல்ல. அது முழுக்க முழுக்க பார்ப்பனியத்தின் மீது சுழற்றப்பட்ட சாட்டையடிகள். அதை அப்படியே பகைமூட்டும் விதமாய் வடிவமைத்து குளிர்காயும் இடைநிலை வியாபாரிகள் பற்றி இன்னமும் நாமெல்லாம் உணராமலும் உள்வாங்காமலும் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

இளையராஜா இந்த இடத்திற்கு வந்தததே பெரும் புரட்சி தான். இந்த இடத்தை அடையும் முன் அவருக்கு நேரிடையாகவும் உளவியல் ரீதியாகவும் மிகத்திடகாத்திரமாய் கட்டமைக்கப்பட்ட அத்தனை கயவாளித்தன தடைகளையும் தகர்த்து இவ்விடம் அடையவே அவருக்கு இவ்வாயுள் போதவில்லை. (சிம்பொனி அரசியல் படியுங்கள்) அவரை அவ்வளவு எளிதாகவெல்லாம் இசைஞானி பட்டத்திற்க்குள் இச்சமூகம் அடைத்து மகிழவில்லை. அவ்ளோ தரமான சமூகநீதியுள்ள சமூகமாய் இது ஒருபோதும் இருந்ததில்லை. இயக்குநர் இரஞ்சித்தும் மிக எளிதாகவெல்லாம் இந்த இடத்தை நெருங்கிவிடவில்லை. அவ்வளவு வக்கிரமான சமூகமிது.

இளையராஜாவை தூரத்திலிருந்தே உள்வாங்கி மகிழும் மனிதர் இரஞ்சித். இளையராஜாவின் இசைகளுக்கு ஓவியம் தீட்டனும் என்றதுமே தனது குருநாதன் சந்ரு மற்றும் மற்ற மாணவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, அவரது இசைக்கு தனது தூரிகையை தந்து மகிழ்ந்தவர் தான் இரஞ்சித். திரிபு வேலை செய்வதால் இரஞ்சித் மகிழ்வார் என்றென்னி யாராவது இருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இதுபோன்ற சித்தரிப்பு வேலைகள் கண்டு இரஞ்சித்தால் மகிழ வாய்ப்பேயில்லை. சமத்துவம் தேடியலைந்த சாலச் சிறந்தோர்களின் பெயரை மட்டும் சொல்வதாலோ, அவர்களது புகைப்படங்கள் மட்டும் வைப்பதாலோ இச்சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்கிவிட முடியாதென்பதை மிகத்தெளிவாய் உள்வாங்கி பயணிக்கும் மனிதர் தான் இயக்குநர் இரஞ்சித். அவர் விரும்புவதெல்லாம் எல்லாத்தளங்களுக்குமான சமரசமற்ற சமத்துவமும், சகோதரத்துவமும் மட்டுமே. அதை சாத்தியப்படுத்த சரியான வழியை எவர் சொல்லியிருந்தாலும், காட்டியிருந்தாலும், அவர்களுடனான உறவை வெறுக்காமல், எதிர்க்காமல் சித்தாந்த ரீதியாக அதை உள்வாங்கி கொள்ள இரஞ்சித் மறுத்ததும் இல்லை, அதை மறைத்ததும் இல்லை. அதை தனது படைப்புகளில் வெளிப்படுத்த தயங்கியதுமில்லை. ஆனால் அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை என்றே உணர்கிறேன்.

நான் கூட சில முரண்களோடு அவர் முன் நின்றிருக்கிறேன். முதலில் முரன்களுக்கான விளக்கம். பிறகு அதை எப்படி கையாளனும் என்பதையும், மிகத்தெளிவான பார்வையோடு  எப்படி உள்வாங்கனும் என்பதையும் வகுப்பெடுத்து வளர்த்தெடுக்க முனைவார். ஆனால் இந்த வகுப்பெடுப்பு என்பது நாமாக விரும்பினால் மட்டுமே நடக்க சில சதவீத வாய்ப்பிருக்கு. ஏனென்றால் பிறரது சுதந்தித்திற்குள் பயணிப்பதை அவமானகரமான செயலாக உணரும் மிகச்சாதாரணமான மனிதர். இதை அவரது செயல்பாடுகளின் வாயிலாகவே நம்மால் உணரமுடியும். உண்மையான சமத்துவம் விரும்புவோர்களால் நிச்சயமாகவும் மிகச்சாதாரணமாகவும் உணரமுடியும்.

எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் பார்ப்பனியம் களமாடி களிப்படைவது போல, சில வேசக்கார புரட்சியாளர்களும் அதை செய்து மகிழ்கிறார்கள். இப்போதிருக்கும் மிகக்காத்திரமான போலி பேச்சும் புரிதலற்ற செயல்களும் ஒருபோதும் உங்களை காக்காது. உங்களை சிதைக்கவே செய்யும். ஏனென்றால் உங்களது இந்த புரிதலற்ற இயங்கு தன்மைதான், சமூக சிதைப்பாளர்களின் மூலதனம். யார் யாரென்றே தெரியாத நபர்களுக்காகவும் நிறுவனங்களுக்காகவும் இயங்கும் ரோபோக்கள் போல, நாமும் எடுத்தோம் கவிழ்த்தோமென்று வெளிப்படுத்தும் சொற்களால், முகாந்திரமேயின்றி பிறர் மீது பூசப்படும் கரியென்பது யார்மீதோ பூசப்பட்ட கரியல்ல. உங்கள் முகத்தில் நீங்களே பூசிக்கொள்ளும் வக்கிரமான கறை. அதை ஒருபோதும் அழித்து விட முடியவே முடியாது. மறவாமல் மகிழ்ந்திருங்கள் . நமக்கு நிறைய நிறைய பணிகளிருக்கு.

இது யாருக்குமான விளக்கமோ பதிலோ அல்ல. நம்மைச்சுற்றி நடக்கும் பெரும் வியாபாரத்தினுள் நாம் யாரும் சிதைந்துவிடக்கூடாதென்பாதால், எது ஒன்றையும் தீர ஆராய்வோம். ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம். இணைவோம்.யாராயினும் மறவாமல் கேள்விகள் கேட்போம். பதில்களின் பலத்துடன், சமத்துவம் நோக்கி நகர்வோம். மகிழ்வோம். மகிழ்ச்சி.

  • நன்றி: ஜெபி_தென்பாதியான் பேஸ் புக் சமூக வலைத்தளம்