சினிமா விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம்

1987ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி மும்பை பத்திரிகை ஒன்றில் ‘புத்திசாலி அதிகாரிகள் தேவை’ என விளம்பரம் ஒன்று வெளிவந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், பலரும் இந்த வேலைக்காக விளம்பரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அடுத்த நாள் குவிந்தனர்.

அங்கிருந்த மான் சிங் என்ற ‘அதிகாரி’ இவர்களில் 26 பேரை ‘அதிகாரி’களாகத் தேர்வுசெய்தார். அடுத்த நாள், அதாவது மார்ச் 19ஆம் தேதி சோதனை ஒன்றுக்குச் செல்லப்போவதாக அவர்களை வரச்சொன்னார்.

மான் சிங்கும் புதிதாக சேர்ந்த அதிகாரிகளும் சோதனைக்குச் சென்ற இடம், மும்பையில் உள்ள திரிபுவன்தாஸ் பிம்ஜி பவேரி அண்ட் சன்ஸ் என்ற மிகப் பெரிய நகைக்கடையின் ஒபேரா ஹவுஸ் கிளை. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை நிறுத்தச் சொன்ன மான் சிங், நகைக் கடையிலிருந்து தங்கத்தின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக என்று கூறி, பல நகைகளை எடுத்துக்கொண்டார். இவற்றின் மதிப்பு 30 முதல் 35 லட்ச ரூபாய் இருக்கும்.

பிறகு தன்னுடன் வந்த அதிகாரிகளை அங்கேயே நிறுத்திவிட்டு, அடுத்த சோதனைக்கு புறப்பட்டார். வெகு நேரம் கழித்து சுதாரித்த நகைக்கடை உரிமையாளர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அப்போதுதான் மான் சிங் ஒரு போலி அதிகாரி என்பது தெரியவந்தது. திருவனந்தபுரம், துபாய் என பல இடங்களில் தேடியும் தற்போதுவரை மான் சிங் அகப்படவில்லை. இந்திய குற்றவியல் வரலாற்றில் தீர்க்கப்படாத வழக்குகளில் இதுவும் ஒன்று.

இந்த சம்பவத்தைப் பின்னணியாக வைத்து 2013ஆம் ஆண்டில் அக்ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கி, இந்தியில் Special 26 என்ற படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் ரீமேக்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

80களின் பிற்பகுதியில் நடக்கிறது கதை. வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் காலகட்டத்தில் மயில்வாகனத்திற்கும் (சூர்யா) அவரது நண்பர்களுக்கும் வேலை கிடைக்கவில்லை. அதில் ஒரு நண்பர் தற்கொலைசெய்துகொள்கிறார். சிபிஐ அதிகாரியாக வேண்டுமென நினைக்கும் மயில்வாகனத்திற்கு உயரதிகாரி உத்தமனால் (சுரேஷ் மேனன்), அந்த வேலை கிடைக்காமல் போகிறது. இதனால், ஆத்திரமடையும் மயில்வாகனம் வேறு சிலரை (ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், கீர்த்தி ரெட்டி) சேர்த்துக்கொண்டு சிபிஐ அதிகாரிகளைப் போல நடித்து, போலி சோதனைகளை நடத்தி பணத்தைத் திருடுகிறார். இதைச் செய்வது யார் என கண்டுபிடிக்க முயல்கிறார் உத்தமன். திருடிய பணத்தை மயில்வாகனம் என்ன செய்கிறார், சிபிஐயால் இதைக் கண்டுபிடிக்க முடிந்ததா என்பது மீதிக் கதை.

லாஜிக் எதையும் பார்க்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்த வேண்டுமென்பதை மட்டுமே மனதில் வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கேற்றபடி முதல் பாதியும் விறுவிறுப்பாகவே நகர்கிறது. ஆனால், இரண்டாவது பாதியில், கார்த்திக்கை பெரிய பின்னணியுடன் அறிமுகப்படுத்திவிட்டு, ரொம்பவும் சொதப்பலாக முடித்திருக்கிறார்கள் படத்தை.

சி.பி.ஐ. அதிகாரிகளைப் போல வேடமிட்டு ஒன்றிரண்டு போலி சோதனைகளை நடத்தி, அதை காவல்துறையும் சிபிஐயும் கண்டுபிடித்ததும் படம் ஒரு இடத்தில் முடங்கிவிடுகிறது. இதில் ஈடுபட்டவருடைய வீடும் தொலைபேசி எண்ணும் தெரிந்த பிறகும் சிபிஐ அதை வேடிக்கை பார்ப்பது, அடுத்த போலி சோதனைக்கு ஒத்துழைப்பது என தொடர்ந்து நம்ப முடியாத காட்சிகள். டெரரான அதிகாரியாக வரும் கார்த்திக், நடந்துகொண்டே சில யோசனைகளைச் சொல்கிறார். ஏதோ திட்டமிட்டு, கதாநாயகனின் கும்பலைப் பிடிக்கப்போகிறார் என்று பார்த்தால் அப்படி ஏதும் இல்லை.

படத்தின் உச்சகட்டக் காட்சி, அதாவது 1987ல் நகைக் கடையில் போலி அதிகாரியாக நடித்து நகைகளைத் திருடிய காட்சி எப்படி வந்திருக்க வேண்டும்? ஆனால், எந்தப் பரபரப்பையும் அக்காட்சி ஏற்படுத்தவில்லை. நகைக் கடையிலிருந்து பாதுகாப்பாக நகையை எடுத்துச்செல்லும் போலீஸ்காரர் நாயகனின் ஆளாக மாறிவிடுவது, கடைசியில் சிபிஐ அதிகாரியை போலீஸ்காரர்களே சுடுவது, டெரர் அதிகாரியான கார்த்திக், சிபிஐயை இவ்வளவு நாளாக ஏமாற்றிக்கொண்டிருந்த நபருக்கே வேலைவாங்கித் தருவதாகச் சொல்வது என 80களில் எடுக்கப்பட்ட படத்தைப் போலவே முடிகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இதற்கு நடுவில் ‘நான் வெறும் ஆம்பள இல்லை, ஆம்பள சிங்கம்’, ‘இது சேர்த்த கூட்டம் இல்ல, தானா சேர்ந்த கூட்டம்’ என பஞ்ச் வசனங்கள் வேறு.

அனிருத்தின் இசையில் ‘சொடக்கு மேல’, ‘ஒரு பட்டாம் பூச்சியாம்’ பாடல்கள் இந்த ஆண்டின் ஹிட் பாடல்கள் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டன. அதேபோல ஒளிப்பதிவும் துல்லியம்.

ஆனால், இந்தப் படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் கலை இயக்குனர் கரண். நாளிதழ்கள், கடைகளில் விற்கும் லாட்டரி டிக்கெட்கள், அந்தக் கால வாகனங்கள் என 80களை நெருடாமல் கண் முன் கொண்டுவருகிறார். அதிலும் 80களின் சென்னை மவுண்ட் ரோட்டை திரையில் கொண்டுவந்திருப்பது அட்டகாசம்.

படம் முழுக்க சூர்யாவே (ரொம்பவும் பிரஷ்ஷாக இருக்கிறார்) ஆக்கிரமிக்கும் நிலையில், இந்தப் படத்தில் துண்டு துண்டாக ஆங்காங்கே வந்து போகிறார் நாயகி கீர்த்தி் சுரேஷ். ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் ஆகியோருக்கு இது குறிப்பிடத்தக்க படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில்வரும் கார்த்திக், பெரிய அளவில் சோபிக்கவில்லை.

Special 26 ரொம்பவுமே சுவாரஸ்யமான, கலகலப்பான மசாலா திரைப்படம். அதை அப்படியே எந்த மாற்றமுமின்றி ரீ மேக் செய்திருந்தால், சூர்யாவுக்கு மிகப் பெரிய ஹிட் கிடைத்திருக்கும். -BBC_Tamil