நிச்சயமற்ற தமிழக அரசியல் களம்: யார் வேண்டுமானாலும் இறங்கி வெல்ல முடியுமா?

தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. இரு துருவ அரசியல் காலகட்டம் விடை பெறப்போகிறதா? எப்போது தேர்தல் வந்தாலும் அரியணை நமக்குதான் என தி.மு.க மகிழ்ந்திருக்க முடியுமா?

அமைப்பு பலம், வாக்கு வங்கி பலத்தில் தி.மு.க இன்றுள்ள நிலையில் முன்னணியில் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலில் அ,தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.கவுக்கே அதிகம் கிடைத்தன. இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் முடிவாகிவிட்டது.

இந்த நிலையில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் எங்கே போகும்? அப்படிப் பார்க்கும்போது, ஊசலாடும் அல்லது அலைபாயும் மக்கள் வாக்குகள் தாறுமாறாக பிரிய வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.

கமலும் ரஜினியும் எம்.ஜி.ஆர் என்ற மக்கள் தலைவருடன் ஒப்பிடத்தகுந்தவர்கள் அல்ல. திடீர் அரசியல்வாதி அல்ல எம்.ஜி.ஆர். அவர் கட்டமைத்த கதாநாயக பிம்பமும் ஒப்பீட்டுக்குள் அடங்காதது. ஆன்மிக அரசியல் பேசும் ரஜினியின் வாக்காளர்கள் யார்? ஆன்மிக வாக்குகள் எனத் தனியாக ஒன்றும் இல்லை.

பிரிப்பதானால், அவர் அ.தி.மு.க சார்பு வாக்குகளைத்தான் பிரிக்க வேண்டும். ஆனால், “ஜெயலலிதா கூட ஆன்மிக அரசியலைத்தான் செய்து கொண்டிருந்தார். அதனால் ரஜினி வருகை எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது,” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்கிறார்.

கமலைப் பொறுத்தவரை அவரது அரசியல் தத்துவம் பிடிபடாததாக உள்ளது. மக்களுடன் நெருங்கி உரையாடி தன் கருத்துகளை கமல் புரியவைப்பாரா என்பதும் சந்தேகம். திராவிட அரசியலையும் சேர்த்துப்பேசுவதால் மட்டும் தி.மு.க ஆதரவு வாக்குகளை கமலால் ஈர்க்க முடியுமா?

சில கருத்துக் கணிப்புகள், கமல் அதிக வாக்குகளை ஈர்க்க முடியாது என்று தெரிவிக்கின்றன. காவி என் நிறம் அல்ல என்று சொன்ன கமல் கருப்புக்குள் காவி உட்பட பல நிறங்கள் அடக்கம் என்றும் சொன்னார். சமீபத்தில் திராவிடம் தமிழ்நாடு தழுவியது மாத்திரமல்ல என்றார். “சிலர் கூறுவது போல் திராவிடத்தை அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தேவையின்றி தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டியதும் இல்லை” இப்படியெல்லாம் பேசுவது மூலம் எல்லாத் தரப்புக்கும் சமிஞைகளை கமல் அனுப்புகிறாரா? அல்லது மாற்றி மாற்றி பேசுகிறாரா? திட்டவட்டமாக கொள்கையை வெளிப்படுத்திவிட விரும்பவில்லையா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

சினிமா கவர்ச்சி, புகழ் மட்டுமே போதுமானதா? சினிமாப் புகழ்தான் அடிப்படை என்றால் விஜய், சூர்யா, அஜித், விக்ரம், விஜய் சேதுபதி ரசிகர்கள் யாரை ஆதரிப்பார்கள்? ரசிகர்கள் கட்சி சார்பற்றவர்கள் என எப்படி முடிவுக்கு வர முடியும்?

கமல், ரஜினி ரசிகர்களாக இருப்பவர்களின் வாக்குகள் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது நிச்சயமல்ல. 1996ல் ரஜினிக்கு அதிக செல்வாக்கு இருந்த காலத்திலேயே 7 சதவீத வாக்குகளே கிடைக்க வாய்ப்புள்ளது என ஒரு சர்வே வெளிப்படுத்தியது.

ஆனால் சமீபத்திய ( இந்திய டுடே) சர்வே ஒன்று ரஜினிக்கு 16 சதவீத வாக்குகளும் 33 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறியுள்ளது. இதுவும் சாத்தியமில்லாதது என்றே தோன்றுகிறது.

திமுக, அதிமுக மீது பெருமளவில் அதிருப்தி இருந்தால் 2016 சட்டசபையில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளையாவது மக்கள் நல கூட்டணி பெற்றிருக்க வேண்டும். திமுக, அதிமுகவும் இணைந்து மொத்தத்தில் 80 சதவீத வாக்குகளை பெற்றது ஏன்?

மற்றொரு சர்வே (REPUBLIC TV ) 2019 மக்களவைத் தேர்தலில் 33.7 சதவீத வாக்குகளையும் 23 இடங்களையும் ரஜினி பிடிப்பார் என்று கூறுகிறது. இது எதார்த்த நிலைக்கு சற்றும் தொடர்பு இல்லாதது. சில சக்திகள் ரஜினியை உயர்த்திப் பிடிக்க முழுநேரமும் செயல்படுகின்றன.

வேறு வேறு குரலில் பேசினாலும் ரஜினியும் கமலும் திமுக, அதிமுக, வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு தளம் அமைக்க முயற்சிக்கின்றனர் என்று ஆரூடமும் சொல்லப்படுகிறது. இருவரும் இணைவதை சிலர் விரும்புகிறார்கள்.

ரஜினியுடன் கமல் கைகோர்க்க வேண்டும் என்று தமிழருவி மணியன் வலியுறுத்துகிறார். ரஜினி அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்கிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டுச் சேரக் கூடாது என தமிழருவி மணியன் ரஜினியிடம் வலியுறுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லை ரஜினியின் கட்சிக்கு வேறு கட்சிகளின் பிரபலங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். வெகுஜனக் கட்சியாக மாறும் எந்தக் கட்சியும் வடிகட்டியே தொண்டர்களைச் சேர்ப்பேன் என்பது நடக்காத காரியம்.

அரசியலில் சில காலமாவது பணியாற்றாமல் முதல்வர் கனவில் வருபவர்களை ஏற்கும் அளவுக்குத்தான் தமிழக மக்களின் அரசியல் புரிதல் இருக்கிறதா? குறிப்பாக ஆட்சி அதிகாரத்தை நெருங்க வாய்ப்புள்ள தி.மு.க. வெறுமனே அடையாளப் போராட்டங்களை தவிர்த்து களத்தில் மக்களுடன் நிற்க வேண்டும்.

ஊசலாட்டமற்ற கொள்கை உறுதி அந்தக் கட்சிக்கு இப்போது தேவை. அ.தி.மு.கவில் உள்ளது போல யார் வேண்டுமென்றாலும் உயர் பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் கட்சியினர் முழுமூச்சுடன் பணியாற்றுவார்கள்.

அ.தி.மு.க அணிகளைப் பொறுத்தவரை மக்கள் ஆதரவை திரட்ட என்ன செய்யப் போகின்றன என்பதை யூகிக்க முடியவில்லை. அதிமுக-எடப்பாடி-ஓபிஎஸ் அணி பலம் பெற வேண்டுமென்றால் தினகரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆட்சியையும் தக்க வைக்க முடியும் என்று உள்ளுக்குள் கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. தினகரனை சேர்ப்பதில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆட்சேபம் நீடிக்கிறது.

எனினும் பிளவுபட்டு நின்றால் ஆட்சிக்கும் ஒட்டுமொத்த எதிர்காலத்துக்கும் ஆபத்து என்றால் நிபந்தனைகளும் ஆட்சேபங்களும் கைவிடப்படலாம்.

ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு கடும் நிலையை தினகரனும் எடுப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்றத்தில் எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு காலவரையின்றி நீடித்தால் தேர்தல் உடனடியாக வராது என்று சொல்லலாம்.

நீண்டகால அரசியல் அனுபவம் பெற்ற அதிமுக, திமுகவும் தங்கள் வசம் உள்ள பணபலம் ஆள்பலம் உள்ளிட்ட வழிகளை – உத்திகளைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் போடும் கணக்கு வித்தியாசமாகவே இருக்கும். தமிழக அரசியலில் களம் யாரும் புகுந்து விளையாட முடிகிற களமாக காட்சியளிக்கிறது.

ஆனால் மக்கள் யாருக்கு எத்தகைய அதிர்ச்சி வைத்தியம் வைத்திருக்கிறார்களோ? -BBC_Tamil