நாங்க அரிவாள் கொடுக்கிறோம்.. அதையும் பழகிக்கங்க ஜீயரே.. பாரதிராஜா விளாசல்!

தேனி : சோடா பாட்டில் வீசுத்தெரிந்த ஜீயர், நாங்கள் கொடுக்கும் அரிவாளையும் பழகிக்கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும் என்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சங்கர மட இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இசைத்த போது, எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. இதனால் தமிழ்த்தாயை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இந்நிலையில் இன்று தேனியில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாரதிராஜா, இந்த விவகாரத்தில் விஜயேந்திரர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்தும் அதை ஏற்காமல், எங்களுக்கும் கல் எரியத் தெரியும், சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று ஜீயர் பேசி வருவது ஏற்கத்தக்கது அல்ல.

ஒருவேளை மடாதிபதி ஆவதற்கு கல் எரிவதும், சோடா பாட்டில் வீசுவதும் தான் தகுதி என்றால், தமிழகத்தில் பல பேர் அதற்கு தகுதியானவர்களே. அதோடு அரிவாள் கொடுக்கிறோம் அதையும் ஜீயர் பழகிக்கொண்டால், இன்னும் வசதியாக இருக்கும் என்று பாரதிராஜா தெரிவித்து உள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஏற்கனவே இருந்த இரண்டு மெயின் ஸ்விட்சுகள் தற்போது இல்லை. அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாகவே இது போன்ற சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது என்றும், திரை உலகில் வைரமுத்துவின் வரிகளால் புகழ் பெற்றவர்கள் இதற்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள் என்றும் ரஜினியை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.

tamil.oneindia.com