ஆந்திரா, கேரளாவில் வசூல் குவிக்கும் தமிழ் படங்கள்

தமிழ் படங்களுக்கு சமீப காலமாக ஆந்திரா, கேரளாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்ளை விரும்பி பார்க்கிறார்கள். நயன்தாரா படங்களுக்கும் வரவேற்பு உள்ளது.

அங்குள்ள முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக இவர்களின் படங்கள் வசூலில் சக்கை போடு போடுகின்றன. இரு மாநிலங்களிலும் நேரடியாகவும், ‘டப்பிங்’ செய்தும் வெளியிட்டு வினியோகஸ்தர்கள் நல்ல பணம் பார்த்து வருகிறார்கள். இந்தியிலும் தமிழ் படங்களை இப்போது ‘டப்பிங்’ செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

வெளிமாநிலங்களில் சந்தைப்படுத்துவதன் மூலம் தமிழ் படங்கள் அனைத்தும் லாபம் பார்க்க தொடங்கி இருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரஜினிகாந்தின் எந்திரன், லிங்கா, கபாலி படங்கள் ஏற்கனவே ஆந்திரா, கேரளாவில் வெளியாகி நல்ல வசூல் பார்த்தன. தற்போது ரூ.450 கோடி செலவில் தயாராகி உள்ள ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் தெலுங்கு உரிமை ரூ.75 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலா படமும் நல்ல விலைக்குபோய் உள்ளது.

கமல்ஹாசனின் முந்தைய அனைத்து படங்களும் ஆந்திராவில் வசூல் குவித்துள்ளன. விஸ்வரூபம்-2 படத்தையும் நல்லை விலைக்கு கேட்டுள்ளனர். விஜய்யின் கத்தி, தெறி சமீபத்தில் வெளியான மெர்சல் படங்களுக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில் நல்ல வரவேற்பு இருந்தது. அஜித்குமாரின் வேதாளம், வீரம், விவேகம் படங்களும் நல்ல வசூல் பார்த்தன.

சூர்யாவின் அஞ்சான் படம் தமிழகத்தை விட ஆந்திராவில் அதிக வசூல் குவித்தது. தானா சேர்ந்த கூட்டம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை ரூ.10 கோடிக்கு மேல் தெலுங்கு உரிமை வாங்கி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ‘கேங்க்’ என்ற பெயரில் வெளியிட்டனர்.

அப்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பவன் கல்யாணின் அஞ்சாதவாசி, பாலகிருஷ்ணாவின் ஜெயசிம்மா படங்களும் வெளியானது. அந்த இரு படங்களுக்கும் இணையாக சூர்யாவின் கேங்க் படம் ரூ.30 கோடி வசூலித்ததாக வினியோகஸ்தர் ஒருவர் கூறினார். இதுபோல் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படமும் தெலுங்கில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. சூர்யா, கார்த்தியின் முந்தைய படங்களும் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடியுள்ளன.

விஷாலின் துப்பறிவாளன், விக்ரமின் ஐ, இருமுகன், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன் படங்களும் நன்றாக ஓடின.

கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு இணையாக முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் 200 தியேட்டர்களுக்கு மேல் நேரடி தமிழ் படங்களாக வெளியிட்டு ரூ.20 கோடி வரை வசூல் ஈட்டுகின்றன.

தெலுங்கு படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் வினியோகஸ்தர் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும்போது, “முன்பெல்லாம் தமிழ் படங்களின் தெலுங்கு உரிமையை வாங்க வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் இப்போது தமிழ் படங்களுக்கு அங்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் ரூ.10 கோடி, ரூ.20 கோடி என்று போட்டி போட்டு வாங்கி வெளியிட்டு ரூ.30 கோடி, ரூ.40 கோடி என்று நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள்.

சமீபத்தில் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியான முன்னணி தமிழ் நடிகர்களின் அனைத்து படங்களும் நல்ல லாபம் பார்த்துள்ளன” என்றார்.

-dailythanthi.com