ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்த லாரன்ஸ்!

சேலம் : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த இளைஞர் யோகேஸ்வரன் குடும்பத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்துள்ளார். யோகேஸ்வரனின் நினைவுநாளில் அவருடைய குடும்பத்தாரிடம் இந்த வீட்டை ராகவா லாரன்ஸ் ஒப்படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சி போராட்டம் நடைபெற்றது. சேலத்தில் மாணவர்கள் ரயிலை மறித்து நடத்திய போராட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பியை பிடித்து ஏறிய சேலம் மன்னார்பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவர் யோகேஸ்வரன் மரணமடைந்தார்.

யோகேஸ்வரனின் வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ராகவா லாரன்ஸ் யோகேஸ்வரனுக்கு பதிலாக அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்வேன் என்று உறுதியளித்தார். இதன்படி யோகேஸ்வரனின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் குடும்பத்திற்காக கட்டப்பட்ட வீட்டை லாரன்ஸ் யோகேஸ்வரனின் பெற்றோரிடம் அளித்தார். இதை தனது கடமையாகச் செய்யவில்லை என்றும் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது என்பதற்காகவே வீடு கட்டி கொடுத்ததாகவும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com