சவரக்கத்தி சாதிக்குமா?

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல் படைப்பு ரீதியாக தனக்கென்று தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக தொழில் கற்ற ஜிஆர் ஆதித்யா இயக்கியுள்ள படம் சவரக்கத்தி. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் ராம், மிஷ்கின், நடிகை பூர்ணா என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் வழியாக கதை சொல்ல வரும் சவரக்கத்தி பிப்ரவரி 9 அன்று உலகமெங்கும் சுமார் 400 திரைகளில் ரீலீஸ் ஆகிறது.

தமிழகத்தில் சுமார் 180 திரைகளில் சவரக்கத்தி படம் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளளது. கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் நெகட்டிவ் உரிமை 3 கோடியே 25 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. படத்தின் மீது உள்ள நம்பிக்கையில் தமிழகம் முழுவதும் விநியோக அடிப்படையில் முண்ணனி விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.

எளிய மனிதர்களை பற்றி வலிமையாக பேசும் சவரக்கத்தி படத்தில் அழகான கிளாமர் நடிகைகள் யாருமில்லை. கிளாமர், குத்துப் பாட்டு, முன்னணி நடிகர்கள் இருந்தால் மட்டுமே படம் வியாபாரம் ஆகும், வசூல் கிடைக்கும் என்ற சூழல் உள்ள இன்றைய காலகட்டத்தில் நடிகை பூர்ணாவை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகைகள் ஒரு பக்கம், கிளாமராக மட்டுமே நடிக்கும் நடிகைகள் மற்றொரு பக்கம், படங்களில் வந்து போகும் நடிகைகள் இன்னொரு பக்கம் என பல விதமானவர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநரின் கற்பனையில் உருவான, வழக்கமான ஹீரோயின்களைப் போல இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் நடிகைகள் தமிழ் சினிமாவில் குறைவுதான்.

ஒரு இயக்குநரின் கதாபாத்திரத்திற்கு அவர் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உயிர் கொடுத்துள்ளார். நடிகை பூர்ணா. ‘சவரக்கத்தி’ படத்தோட கதையை எழுதி முடிச்சதும் நாயகி கதாபாத்திரம் ரொம்ப முக்கியமான கதாபாத்திரமா அமைஞ்சது.

அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணியில் இருக்கிற ஆறேழு நடிகைகள்கிட்ட கேட்டோம். ஆனால், அவங்க யாருமே நடிக்க ஒத்துக்கலை.இந்தக் கதையை சொன்னதுமே பூர்ணா நடிக்க சம்மதிச்சாங்க. அப்புறம் அவங்களுக்கு புடவை கட்டி, பூ வச்சிக்கிட்டு, மஞ்சள் பூசுன முகத்தோட, ரோடுல சாதாரணமா நடக்க வச்சோம். பூர்ணா சேலையை இழுத்து சொருகின விதம், நடந்த விதம் அப்படியே படத்தோட கதாபாத்திரம் சுபத்ரா-வா தெரிஞ்சாங்க. சவரக்கத்தி படத்துல மிஷ்கின், ராம் எந்த அளவுக்கு பேசப்படுவாங்களோ, அதே அளவுக்கு பூர்ணாவும் பேசப்படுவாங்க,” என்கிறார் இயக்குநர் ஜி ஆர் ஆதித்யா.

tamil.filmibeat.com