இனி என் எஞ்சிய வாழ்வு உங்களுக்காக… முழங்கிய கமல்ஹாசன்.. ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்

மதுரை : இதுவரை ஒரு நடிகனாக நல்ல வீடு, கார் என சொகுசான வாழ்க்கை கொடுத்துவிட்டீர்கள். அதற்கு இதுவரை நான் இதுவரை எதுவும் செய்ததில்லை ஆனால், இனிமேல் என் எஞ்சிய வாழ்நாள் உங்களுக்காக என்று கமலஹாசன் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற தனது கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்திப் பேசினார் கமலஹாசன். இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் கொடி ஏற்றிய கமலஹாசன், பின் தனது மக்கள் நீதி மய்யக் கட்சியின் பெயரை அறிவித்த பின்பு மாவட்டப் பொறுப்பாளர்களைப் அறிவித்துப் பேசினார். அதன்பிறகு கொள்கைகள் குறித்துப் பேசும்போது, இதுவரை நான் நடிகனாக இருந்தவரை எனக்கு நீங்கள் சம்பளமாகப் பணம் கொடுத்து உள்ளீர்கள். நீங்கள் கொடுத்த சம்பளத்தில் நான் வீடு, கார் என சொகுசாக வாழ்ந்துவிட்டேன். ஆனால், உங்களுக்காக களத்தில் இதுவரை எதுவுமே செய்தது இல்லை என்கிற குற்ற உணர்வு என்னை வாட்டியது. அதனால் தான் இப்போது உங்களோடு கரம் கோர்த்துள்ளேன். இனிமேல் எஞ்சிய என் வாழ்நாள் உங்களுக்காகவே என்று கூறி மக்களை நோக்கி கை நீட்டி ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்ட கமலஹாசனுக்கு, மக்கள் தங்கள் கரகோஷத்தின் மூலம் பதிலளித்தனர்.

tamil.oneindia.com