இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்.. தெற்கிலிருந்து போய் வடக்கை கலக்கிய ஸ்ரீதேவி!

சென்னை: இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரியவர் ஸ்ரீதேவி. தெற்கிலிருந்து போய் வடக்கைக் கலக்கிய மிகப் பெரிய நடிகையும் கூட. இந்தியில் சினிமாவில் அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த ஜித்தேந்திரா, அமிதாப் பச்சன் போன்ற சூப்பர் ஸ்டார்களையும் தாண்டி ஸ்ரீதேவி கொடி நாட்டியது அப்போது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

ஜெயப்பிரதா, ரேகா என சக நடிகைகளின் கடும் போட்டியையும் தாண்டி தனது தனி ஸ்டைலால் ஒட்டுமொத்த வட இந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் ஸ்ரீதேவி.

1978ம் ஆண்டு சொல்வா சவான் என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. மிஸ்டர் இந்தியா, மாவாலி, டோபா, சாந்தினி போன்ற படங்களால் இந்தி ரசிகர்களை உலுக்கினார். மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள் இவை. சால் பாஸ், சத்மா, லம்ஹே, கும்ரா போன்றவை அவரரது நடிப்பால் பேசப்பட்டவை.

15 ஆண்டு காலம் படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி 2012ல் மீண்டும் நடிக்க வந்தார். இங்கிலீஷ் விங்கிலீஷ் அவரது நடிப்புக்காக பேசப்பட்டது. கடைசியாக அவர் இந்தியில் நடித்த படம் மாம். கடந்த ஆண்டு வெளியானது.

வட இந்தியாவுக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டியதோடு, அங்குள்ள சூப்பர் ஸ்டார்களையும் தாண்டி புகழ் பெற்றது என்று பார்த்தால் அது ஸ்ரீதேவி மட்டுமே. அவருக்கு முன்பு வைஜெயந்தி மாலா போன்றோர் இருந்தாலும் கூட ஸ்ரீதேவி அளவுக்கு யாருமே புகழ் நாட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com