நடிகை ஸ்ரீதேவி நடித்த பல இந்திப் படங்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமாக ஓடின. அங்கேயும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பாகிஸ்தானில் இந்தி படங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் கராச்சி போன்ற நகரங்களில் திருட்டு சி.டி.க்கள் மூலம் பார்த்து ரசிக்கிறார்கள்.
ஸ்ரீதேவி மரணச் செய்தி கேட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். அவர்கள் பொது சுவர்களிலும், டீக்கடைகளிலும் ஸ்ரீதேவி பட போஸ்டர்களை ஒடடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் ஸ்ரீதேவி மரணத்துக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.
ஸ்ரீதேவி 1992-ல் நடித்த ‘குதா கவா’ படம் ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டது. இதைக் குறிப்பிட்டு ஆப்கானிஸ்தான் டெலிவிஷன்கள் செய்தி வெளியிட்டன. இந்தப் படத்தில் ஸ்ரீதேவி ஆப்கானிஸ்தான் நாட்டு தாய் பெனாசிராகவும், மகள் மெகந்தி என இரு கதாபாத்திரங்களில் நடித்ததையும் குறிப்பிட்டனர்.
பாகிஸ்தான் ரசிகர் உஸ்தாத் காலிப் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் பிரபலங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது நமது கலாசாரத்தில் ஒன்று. ஸ்ரீதேவியை நினைவு கூறும் வகையில் அவரது போட்டோக்களை டீக்கடைகளிலும், சிறிய ஓட்டல்களிலும் வைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஸ்ரீதேவி ரசிகர் மன்றமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் ரசிகரும் இத்தாலிக்கான ஆப்கானிஸ்தான் தூதருமான வாகீத் உமர் கூறுகையில், ‘ஸ்ரீதேவி ஒரு சிறந்த நடிகை, அவரது சாந்தினி, சால்பாஸ், குதா கவா படங்கள் ஆப்கானிஸ்தானில் பரபரப்பாக ஓடின. குதா கவா படம் பெண்களின் பெருமையை சிறப்பிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதேவி போன்ற அழகிய பெண்ணை நான் பார்த்ததில்லை. ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு நடுவே ஸ்ரீதேவியின் சிரித்த முகம் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது என்று ஒரு ரசிகர் டுவிட்டரில் கூறியுள்ளார்.
-athirvu.com