அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் குடும்பத்தினருடன் நடிகர் சுரேஷ்கோபி சந்திப்பு..

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அகழி பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்கள் பகுதியில் மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு கிடையாது. மேலும் இந்த மக்கள் வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த பகுதியை சேர்ந்த ஆதிவாசி வாலிபர் மது என்பவர் உணவுக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்ற போது அவரை அரிசி திருடியதாக கூறி சிலர் அடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினர் போராட்டத்திலும் குதித்தனர். ஆதிவாசி வாலிபர் மதுவின் குடும்பத்தினரை கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் பா.ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ் கோபி ஆதிவாசி வாலிபர் மதுவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் உறவினர்கள் கூறும்போது தங்கள் குடும்பத்துக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் உயிருக்கு பயந்து வாழ்வதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மது கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சுரேஷ்கோபி எம்.பி.யும் அதற்கு ஏற்பாடு செய்வதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

-athirvu.com