திங்கள்கிழமையன்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 16.3.2018 (வெள்ளிக்கிழமை) முதல் சென்னையில் சென்னையில் தமிழ் மற்றும் பிறமொழிப் படங்களின் படப்பிடிப்பை நடத்துவதில்லை என்றும் அடுத்துவரும் வெள்ளிக்கிழமையான 23.03.2018 முதல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.3.2018 முதல் படங்களின் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் ஏதும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை எனும் முடிவு தொடரும் என்றும் இசை வெளியீடு, டீசர் வெளியீடு உள்ளிட்ட திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் திரைப்படங்களுக்கு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் திரையிடும் நிறுவனங்கள், அதிக அளவு கட்டணங்களை தயாரிப்பாளர்களிடம் வசூலிப்பதால், படங்களை மார்ச்சு 1 முதல் வெளியிடுவதில்லையென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரையிடும் வசதியை ஏற்படுத்தித்தரும் க்யூப், யூஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென கடந்த சில வாரங்களாகவே தயாரிப்பாளர்களுக்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. -BBC_Tamil