தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. வெளியாகும் படங்கள் வெற்றியடைந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகிறதோ இல்லையோ சினிமாவை சுற்றி மிகப்பெரிய வியாபாரம் உள்ளது.
அதேபோல் அரசிற்கும் திரை துறை மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. எனவே பொழுதுபோக்கை மையமாக வைத்து இயங்கும் வியாபாரத்தில் சினிமா முதல் இடத்தில் இருக்கிறது.
ஆனால் கடந்த சில வருடங்களாக சினிமாவில் தயாரிப்பாளர்கள் போதிய வருமானம் இன்றி தவிக்கின்றனர். சினிமா டிஜிட்டல் யுகத்திற்கு மாறியதால் பல பலன்களையும் அடைந்துள்ளனர்.
அதேசமயல் பல இன்னல்களிலும் சிக்கி தவிக்கின்றனர். அதில் ஒன்று டிஜிட்டல் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் தங்களிடம் அதிக தொகை வசூலிக்கின்றனர் என்று கூறி கடந்த 1ஆம் தேதியில் இருந்து தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த புது திரைப்படத்தையும் வெளியிடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சினிமா வாரத்தில் இன்று மூன்றாவது வாரம். இதுவரை இந்த மாதிரியான வேலை நிறுத்தத்தை நாங்கள் பார்த்தது இல்லை என்று பல உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
மூன்று வெள்ளி கிழமைகளை கடந்துள்ள நிலையில் டிஜிட்டல் நிறுவனங்களுடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சனையை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
அதாவது தயாரிப்பாளர்களின் பிரச்சனைகள் முடியும் வரை படப்பிடிப்பையும் நடத்துவது இல்லை என்று கூறியுள்ளனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் (FEFSI) தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்துள்ளது.
அதுவும் சங்கத்தின் தலைவரான ஆர்.கே செல்வமணி, தயாரிப்பாளர்களின் இந்த போராட்டம் நியாயமானது. தங்களின் உரிமையை மீட்டெடுக்க போராடுகிறார்கள். எனவே நாங்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஃபெப்சி சங்கத்தில் ஆயிரகணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றால்தான் வருமானம். இல்லையென்றால் கிடையாது.
இந்த வேலை நிறுத்தம் குறித்து அழகர் என்ற ஃபெப்சி உறுப்பினரிடம் கேட்டப்போது, இது சரியான போராட்டம்தான். இந்த போராட்டம் ஒரு மாதம் நடந்தால் எங்களால் தாங்கிக்கொள்ள முடியும்.
ஆனால் ஒரு மாதத்தை தாண்டினால் அது எங்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். நாங்கள் சினிமா தொழிலாளிகள் என்பதால் வேறு வேலைகள் தெரியாது என்று கூறுகிறார்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் குறிப்பிடுகையில், எங்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. எந்த ஒரு சினிமா சார்ந்த விஷயமும் முறையாக இல்லாமல் உள்ளது. டிஜிட்டல் நிறுவனங்கள் அதிக தொகை வசூலிக்கின்றனர். அதிலும் VPF கட்டணம் என்பது இனியும் எங்களால் ஏறுக்கொள்ள முடியாது. திரையரங்க டிக்கெட் கட்டணம் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. அதை கணினி மையமாக்க வேண்டும்.
கணினி டிக்கெட் முறை கொண்டு வந்தால் ஒரு படத்திற்கு எவ்வளவு வசூல் வருகிறது என்று தெரியும். இதன் மூலம் போலி பாக்ஸ் ஆபிஸ் இருக்காது. அதை வைத்துக்கொண்டு நடிகர்களும் சம்பளத்தை உயர்த்த முடியாது. அப்படியே உயர்த்தி கேட்டாலும், இவ்வளவுதான் வசூல் வந்துள்ளது. இந்த தொகையைதான் நாங்கள் சம்பளமாக கொடுக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூற முடியும். இதுபோல திரை துறையில் தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்ச்னைகள் தீரும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று கூறியுள்ளார்.
இன்று முதல் தமிழகத்தில் நடைப்பெற்று வந்த படங்களின் சூட்டிங் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் நடைபெறும் சூட்டிங் 23ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தத்தால் புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் உள் மாவட்டங்களில் பல திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க சங்கத்தினர்,
- மாநில அரசு நிர்ணயம் செய்துள்ள LBT (வரியை) நீக்க வேண்டும்,
- திரையங்குகளை பராமரிப்பதற்கான தொகையை ஒன்றில் இருந்து ஐந்து ரூபாயாக உயர்த்த வேண்டும்,
- அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளின் சீட் எண்ணிக்கையை குறைக்க அனுமதி தர வேண்டும்,
- திரையரங்குகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை ரெனிவல் என்பதை மாற்றி மூன்று வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெனிவல் என்ற முறையை கொண்டு வர வேண்டும் என்று மா நில அரசுக்கு எதிராக வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளானர்.
தங்களுடைய இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றாத காரணத்தால் இன்று முதல் சினிமா காட்சிகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகிறார். அதுவும் காலவரையரை இன்றி இந்த வேலை நிறுத்தம் நடக்கும் என்று கூறுகிறார். இதே கருத்தை தான் அந்த சங்கத்தின் தலைவரும் முன் வைக்கிறார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் மல்டி ப்ளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்கவில்லை.
இது குறித்து அந்த சங்கத்தில் தலைவர் அபிராமி ராமநாதன்னிடம் கேட்டப்போது, அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் எங்களுக்கு ஹிந்தி, ஆங்கில திரைப்படங்கள் இருக்கின்றன. இதனை பார்க்க ரசிகர்கள் வருவார்கள். இதனால் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டவில்லை.
ஆனால் இது போன்ற திரைப்படங்களை திரையிட்டாலும் ரசிகர்கள் வர மாட்டார்கள். இதனால் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் வேலை நிறுத்ததில் ஈடுபடுகின்றனர். ஆனால் எங்களுக்கு மற்ற மொழி திரைப்படங்கள் கிடைப்பதால் நாங்கள் அதில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார்.
மேலும், இந்த வேலை நிறுத்தங்கள் குறித்து தமிழ் நாடு உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது மூன்று பக்கத்திலும் நியாயம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கையை முன் வைக்கின்றனர். எங்களை பொறுத்தவரை எங்களின் கோரிக்கை முக்கியமானது. அதிலும் வருடத்திற்கு ஒருமுறை ரெனிவல் செய்வது சிரமமாக உள்ளது. இதற்காக வருடம், ஒரு லட்சம் வரை செலவாகிறது. எனவே இந்த கோரிக்கை முக்கியமானது என்று கூறுகிறார்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்க கோரிக்கை 4 மட்டும் தான்.. அதில் ஏசி திரையரங்கத்தை பராமரிக்க 5 ரூபாயும் ஏசி அல்லாத திரையரங்க பராமரிப்பு தொகையை 3 ரூபாயாகவும் உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்பதும் அடங்கும்..
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் மாநில அரசுக்கு எதிரானது என்று சொல்லப்பட்டாலும், அது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிரானது என்று சினிமா துறையில் கூறுகின்றனர்.
அதாவது கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் புதிய திரைப்படங்கள் இல்லாமல் தங்களின் வருமான குறைந்து விட்டது.
எனவே தயாரிப்பாளர்களின் பிரச்சனை முடிந்து திரைப்படங்களை வெளியிட வரும்போது நாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கருதியுள்ளனர். இதற்காக கடந்த வாரம் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே முடிவெடுத்துவிட்டனர்.
ஆனால் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் வெளியிடும் சமயத்தில் செய்தால் தயாரிப்பாளர்களை எதிர்ப்பது வெளிப்படையாக தெரியவரும். இதனால் அவர்களின் எதிர்ப்பை நாம் நேரடியாக சந்திக்க நேரிடும். அதனால் முன்கூட்டியே வேலை நிறுத்தத்ததில் ஈடுபடுவது என்ற முடிவை எடுத்துள்ளனர் என்று சிறிய பட தயாரிப்பாளர் சங்கர் கூறுகிறார்.
ஒரு கால கட்டத்தில் லாபகரமாக இயங்கிவந்த தமிழ் சினிமா இப்போது பாதாளத்தில் சென்றுள்ளது. இதை மீட்டெடுக்க பல வழிகளில் போராட்டங்கள் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் வெற்றியடையுமா என பொருத்திருந்து பார்ப்போம். -BBC_Tamil