சென்னை: சினிமா ஸ்ட்ரைக் முழு வீச்சில் நடந்து வருகிறது. திரையுலகமே முழுக்க ஸ்தம்பித்து நிற்கிறது. இடையில் விஜய், சமுத்திரக்கனி படங்களுக்கு மட்டும் இரு தினங்கள் ஷூட்டிங் நடத்த பர்மிஷன் கொடுத்ததால் எழுந்த சலசலப்பைப் பார்த்து, மற்றவர்கள் அடங்கி நிற்கிறார்கள்.
இந்த திரையுலக ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது பலரது குரலாக இருக்கிறது. ஆனால் அதே நேரம், இந்த முறை திரையுலகின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உறுதி காட்டுகிறார்.
*டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களின் கட்டணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது தயாரிப்பாளர்களை பாதிக்காத வகையில் முறைப்படுத்த வேண்டும்.
*திரையரங்குகளில் டிக்கெட் கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள், தின்பண்டங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், இலவசமாக குடிநீர் வழங்கப்பட வேண்டும் அல்லது வீட்டிலிருந்து கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.
- நடிகர் நடிகைகளின் சம்பளம், ஷூட்டிங் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதான கோரிக்கைகள் இவைதான்.
இடையில் திரையரங்க உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து, ஸ்ட்ரைக்கில் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு எந்த அளவு செவி சாய்க்கும் என்பது தெரியவில்லை. காரணம், அவற்றில் சில மக்களுக்கு எதிரானவை. அவற்றை தயாரிப்பாளர் சங்கமே ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ரஜினி, கமல் இருவரின் பங்கு என்ன… நாளை அரசாளத் திட்டமிடும் இவர்களிடம் இதற்கான தீர்வு இருக்கிறதா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல் இருவருமே இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்… பாதிக்கப்படுவது பெரும் நட்சத்திரங்கள் அல்ல, அன்றாடம் காய்ச்சிகளான சினிமா தொழிலாளர்கள்தான் என இருவருமே அறிவுறுத்தியுள்ளனர்.
தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்கள், நடிகர்கள்… இந்த முத்தரப்பையும் முதலில் அழைத்துப் பேச வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை முதலில் செய்யப் போவது யார்… ரஜினியா, கமலா… அல்லது இருவருமா? என்பதே, இருவரையும் நேசிக்கும் திரையுலகினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். இதோ இருவருக்குமே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!