திரையரங்குகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது: திரையரங்க உரிமையாளர் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது விதிக்கப்பட்டிருக்கும் 1.8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்வது, திரையரங்கு இருக்கைகள் குறைப்பை அனுமதிப்பது, ஒரு வருடத்திற்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிப்பதற்குப் பதிலாக, மூன்று வருடத்துக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்க அனுமதித்தல், பராமரிப்புக் கட்டணமாக ஏசிக்கு 5 ரூபாயும், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 3 ரூபாயும் வசூலிக்க அனுமதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இருந்தபோதும் சென்னையில் உள்ள பல திரையரங்குகள் இயங்கியே வந்தன. இந்த நிலையில், தமிழக அரசுடன் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இன்றும் (வியாழக்கிழமை) இந்தப் பேச்சுவார்த்தை தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.சி. வீரமணி ஆகியோரை திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் சந்தித்துப் பேசினர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “தமிழக அரசு பலவிதத்திலும் உறுதிமொழிகளைத் தந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் நாளை முதல் இயங்குமென்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.

திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதா என்ற கேள்விக்கு, நிறைவேற்ற முடிந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு கூறியிருப்பதாக மட்டும் ராமநாதன் தெரிவித்தார்.

திரையரங்குகளில் திரைப்படங்களைத் திரையிட டிஜிட்டல் புரொஜக்ஷன் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறியுள்ள தயாரிப்பாளர் சங்கம், மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்தது.

அதன்படி, புதிய தமிழ்ப் படங்கள் ஏதும் மார்ச் 1ஆம் தேதி முதல் வெளியாகவில்லை.

அதற்கு முன்பாக வெளியான, நாச்சியார், கலகலப்பு 2 படங்களும் பிற மொழிப் படங்களுமே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பல திரையரங்குகளில் ஓட்டுவதற்கு படங்கள் இல்லாததால், காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் புதிய திரைப்படங்களை வெளியிடாத நிலையில், எந்தப் படத்தை திரையிடுவீர்கள் என திரையரங்க உரிமையாளர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இப்போதைக்கு படம் யாரிடமெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் ஓட்டுவார்கள். திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைப் பொறுத்தவரை நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்” என்று அபிராமி ராமநாதன் கூறினார். -BBC_Tamil