காவிரி விவகாரம்- கர்நாடகத்து நாற்காலிக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்: கமல்ஹாசன்

சென்னை: பாகிஸ்தானோடும். வங்கதேசத்துடனும் மட்டும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள முடியும் போது கர்நாடகத்துடன் காவிரியை பகிர முடியாதா என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுதியுள்ளார்.

கமல் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் கட்சியை தொடங்கினார்.

தற்போது காவிரி விவகாரம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசோ அமைப்போம் அமைப்போம் என்று சொல்லிக் கொண்டே வருகிறது.

இதை வலியுறுத்தி கடந்த 13-ஆவது நாளாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து கமல்ஹாசன் ஆங்கிலத்திலும் தமிழிலும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் என்று தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com