ரஜினி, கமல் படங்கள் உள்பட திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்

பட அதிபர்கள் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 27 நாட்களாக போராட்டத்தை தொடர்கிறார்கள். இதனால் திரையுலகம் முடங்கி உள்ளது. புதிய படங்கள் இல்லாமல் தியேட்டர் அதிபர்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த பழைய படங்களையும் ஏற்கனவே திரையிட்டு நிறுத்திய விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால் உள்ளிட்டோர் படங்களையும் மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.

திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. சில தியேட்டர்களில் 10 பேர், 5 பேர் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பி கொடுத்து காட்சிகளை ரத்து செய்கின்றனர். அநேக தியேட்டர்களில் இரவு காட்சிகளும் காலை காட்சிகளும் நடக்கவில்லை. தியேட்டர்களில் உள்ள கேன்டீன் உணவு பண்டங்கள் விற்பனை ஆகவில்லை. பார்க்கிங் பகுதியும் வெறிச்சோடி கிடக்கிறது.

திரையுலகுக்கு ரூ.750 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். 30 படங்கள் தணிக்கை முடிந்து திரைக்கு வர காத்திருக்கின்றன. கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படமும் தணிக்கை முடிந்து யுஏ சான்றிதழ் பெற்று இருக்கிறது. 20 படங்களை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) வெளியிடுவதற்காக மேலும் 20 படங்கள் பட வேலைகளை முடித்து தணிக்கைக்காக காத்திருக்கின்றன. ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படமும் இதில் அடக்கம். இந்த படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளிவரும் என்று அறிவித்து இருந்தனர். இந்த படத்துக்கு தடையில்லா சான்று பெற்று தணிக்கையை முடித்து திட்டமிட்டபடி வெளியிட முயற்சி நடக்கிறது.

விஷால்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள இரும்புத்திரை, கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா, விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள கரு, விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி ஆகிய படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. ஸ்டிரைக் முடிந்ததும் முதலில் தணிக்கையான படங்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் 50 படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டு உள்ளது.

-dailythanthi.com