காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது அரசியல் விளையாட்டு என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
“மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது அடக்குமுறை. எதிர்ப்பு குரலே வரக்கூடாது என்று அடக்குமுறை செய்ததால் தீயாக பரவிவிடும். மாணவர்களின் எழுச்சி என்பது அவர்களுடைய கோபம் மட்டுமல்ல.
மக்களின் கோபத்தை அவர்கள் பிரதிபலிக்கின்றனர். நானும் அப்படித்தான். இதை அடக்க அடக்க அதிகரிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கேட்பது ஒரு அரசியல் விளையாட்டு. ஓட்டு வேட்டைக்கான விளையாட்டு. இப்படி திசை திருப்பப்படும் என்று ஏற்கனவே தெரிவித்தேன்.
அப்படித்தான் நடந்து இருக்கிறது. என்னுடைய முறையீடு இனி இங்கே கேட்டு பிரயஜோனம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்காக நாளை (இன்று) தூத்துக்குடி செல்கிறேன். அங்குள்ள பிரச்சினைகள் எனக்கு தெரியும். இவருக்கு என்ன தெரியும் என்று கிண்டல் அடித்து பேசுகின்றனர்.
மக்களுக்கு என்னை விட அதிகம் தெரியும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நித்திரையில் இருந்து எழவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி. -BBC_Tamil