ஸ்ட்ரைக்கில் தமிழ் சினிமா… வசூலில் பின்னியெடுத்த ரங்கஸ்தலம்!

தமிழ் சினிமா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புதுப்பட வெளியீடுகள் எதுவுமில்லாமல் தொடர் ஸ்ட்ரைக்கில் உள்ளது.

சினிமா துறையில் ஒரு முழுமையான சீர்த்திருத்தம் வராமல் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெறுவதாக இல்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஷால்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய சீஸன் என்பது கோடை காலம்தான். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தினமான இந்த சீஸனில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பெரிய பொழுதுபோக்கு சினிமாதான். சுமார் படங்கள் கூட பெரிய அளவு கல்லா கட்டும்.

ஆனால் இந்த சீஸனிலோ, ஸ்ட்ரைக் காரணமாக தமிழ் சினிமாவே ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர்களும் டல்லடித்துக் காணப்படுகின்றன. எப்போதாவது சில ஆங்கிலப் படங்கள் வெளியாவதோடு சரி.

இந்த சூழலில்தான் இரண்டு தெலுங்குப் படங்கள் இந்த வாரம் வெளியாகி, தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவை ரங்கஸ்தலம் மற்றும் பாகி 2.

இவற்றில் ராம் சரண் தேஜா – சமந்தா நடித்த படம் ரங்கஸ்தலம். இந்தப் படம் சென்னையில் மட்டுமே மூன்று நாட்களில் ரூ 70 லட்சத்தை வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ 1 கோடி ஆகியிருக்கும் என்கிறார்கள். ஒரு நேரடி தெலுங்குப் படத்துக்கு இது பெரிய வசூல் ஆகும்.

பாகி 2 படத்துக்கும் ஓரளவு நல்ல வசூல் கிடைத்துள்ளது. ஈஸ்டர் விடுமுறை மற்றும் வார இறுதி என்பதால் இந்தப் படங்கள் வசூல் குவித்துள்ளன. இது பல தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை கடுப்பாக்கியுள்ளது.

tamil.filmibeat.com