அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் – கமல் ஹாசன்

எங்களின் போராட்டம் மக்களின் எதார்த்த வாழ்க்கையை பாதிக்காது என்றும், அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் என்றும் கமல்ஹாசன் கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

“மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் வாழ்க்கையே நாசமாக போகிவிடுமே என்று இடைஞ்சலை பற்றி கவலைப்படாமல் அராஜகம் விளைவிக்கக்கூடாது. அரசியல் சாசனத்தின்படி நம் கருத்துகளை தெளிவாக சொல்லியும், அழுத்தம் கொடுக்க வசதிகள் இருக்கின்றன. அவைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வெறும் வீண் அரசியல் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. வாய்ச்சவுடால் அரசியல் போதாது. என்னுடைய போராட்டம் மக்களின் எதார்த்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதற்கு காரணம் யாரோ அவர்களை பாதிக்கும் போராட்டமாக இருக்கும். ஒத்துழையாமை இயக்கம் போல கூட இருக்கலாம்” என்று அவர் கூறினார் என்கிறது அந்த செய்தி.

“மேலும், அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். அதேபோல், உங்களுடைய நண்பர் ரஜினிகாந்தையும் எதிர்ப்பதற்கான சூழல் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,

ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்? அப்படி ஏற்படாமல் இருந்தால் நல்லது. ஏற்பட்டால் நின்று செயல்படாமல் இருந்துவிட முடியுமா?” என்று பதிலளித்தார் என்கிறது அந்த செய்தி.

-தினத்தந்தி