காவிரி வாரியத்துக்காக பிரதமரை சந்திப்பேன் – கமல்ஹாசன் அதிரடி..

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கமல் ஹாசன் நேற்று வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி சென்றார்.

ரெயிலிலேயே கமல் ஹாசன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கேட்கப்பட்டது. “தமிழக அரசியல் கட்சிகள் உங்கள் நண்பரும், அரசியல்வாதியாக மாறி இருப்பவருமான ரஜினி காந்தை மராத்திக்காரர் என்றும் கன்னடர் என்றும் விமர்சிக்கிறார்களே. நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்” என்று கேட்டனர்.

அதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில், “இதில் நான் வித்தியாசமானவன், ரஜினிகாந்த்தை அவரது பூர்வீகம் பற்றிய விவாதத்துக்குள் செல்ல மாட்டேன். அதுதான் விவாதம் இல்லை. அவர் இந்த சமுதாயத்துக்கும், மாநிலத்துக்கும் என்ன செய்யப்போகிறார் என்பது மட்டும் தான் விவாதமாக இருக்கும்” என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் போராட்டங்கள் பற்றிய கேள்விக்கு கமல் ஹாசன் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் நான் வலியுறுத்தி கூறுகிறேன். காவிரி பிரச்சினையை தீர்க்க அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தவறி விட்டன. தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க. உண்ணாவிரதம் இருப்பது நகைச்சுவை. இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு தேவையான நேரத்தில் நெருக்கடி கொடுக்க தவறி விட்டது.

உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் எனக்கு ஈடுபாடு கிடையாது. அதை ஆதரிக்கவும் மாட்டேன். சிலர் சாலையை மறிக்கிறார்கள். ரெயிலை மறிக்கிறார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி செய்ய முடியாது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். முழு அடைப்பு நடத்துவதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அந்த மாதிரியான போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நான் ரெயிலில் செல்லும் போது வழிநெடுக ரெயில் நிலையங்களில் எனக்கு வரவேற்பு கொடுக்க ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதனால் ரெயில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ரெயில் நிலையங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள் வேண்டாம் என்று ரத்து செய்து விட்டேன்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே சமயம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படும் வகையில் எங்கள் போராட்டம் அமையும். நாங்கள் நேரடியாக பிரதமரை சந்திப்போம். தொடர்ந்து கோரிக்கைக்காக அழுத்தம் கொடுப்போம்.

நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்ற அக்கறை எனக்குள்ளேயும் இருக்கிறது. பொறுப்புக்கு என்னை அமர வையுங்கள். அதை நான் செய்கிறேன்.

எனது கட்சியில் இணைந்துள்ளவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் செய்யும் தொழிலை தொடர்ந்து கவனித்து வரவேண்டும். பகுதி நேரமாக அரசியலில் ஈடுபட்டாலே போதுமானது. அரசியலில் லஞ்சம் ஊழலை, ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

காவிரி விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. திருச்சி பொதுக் கூட்டம் காவிரிக்கான நோக்கத்தை விளக்கும் கூட்டமாக இருக்கும். மேலும் கட்சியின் கொள்கைகளை முழுமையாக அறிவிக்கும் கூட்டமாக இருக்கும்.

அவ்வாறு கட்சி கொள்கைகள் முழுமையாக அறிவிக்கப்படும்போது எங்களுடன் எந்த கட்சிகள் அணி சேரும் என்பதை முடிவு செய்வார்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

-athirvu.com