மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
30 ஆண்டுகளுக்கு முன்பே நான் எனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டேன். எனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய போதே எனது அரசியல் பயணம் தொடங்கி விட்டது.
எனது ரசிகர் மன்றத்தை நான் தலைவரை வழிபடும் மன்றமாக வைத்திருக்கவில்லை. அதை நல்ல விஷயங்கள் செய்யும் மன்றமாக மாற்றினேன். அதற்காக நான் முதலில் மிகவும் போராட வேண்டி இருந்தது.
அப்போது மக்கள் என்னை உடனே அரசியலுக்கு வரும்படி வேண்டினார்கள். ஆனால் நான் சமுதாயப் பணி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதை பிறகு மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
ஆனால் அதை அப்போதைய அரசு விரும்பவில்லை. எங்களுடைய நற்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்.
நாங்கள் சமுதாய பணிகள் மூலம் புகழ் பெற்று விடக்கூடாது என அப்போதைய அரசு நினைத்தது. சில சமயங்களில் எங்களது நற்பணிகளுக்கு சிறிய அளவிலேயே நாங்கள் விளம்பரம் செய்ய முடிந்தது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ரத்த தானம் செய்தது நாங்கள்தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 1 லட்சம் ஜோடி கண்களை தானம் செய்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்பு தானம் செய்தோம்.
இறுதியில் உடலையே முழுமையாக தானம் செய்வதாக அறிவித்துள்ளோம்.
நாங்கள் பெற்றால்தான் பிள்ளையா? என்று ஒரு அறக்கட்டளை தொடங்கி உள்ளோம். எச்.ஐ.வி. பாதித்தவர்களின் நலனுக்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதில் ஏராளமான குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
எனது ரசிகர் மன்றத்தில் சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள்தான் தெருத் தெருவாக சென்று சமுதாய பணிகளை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தாலுகாவிலும் அவர்கள் உள்ளனர்.
தற்போது இதே மன நிலையில் உள்ளவர்களையும் எங்களது அணியில் சேர்த்து பணிகளை செய்து வருகிறோம். விவசாயம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று செயல்பட தொடங்கி உள்ளோம்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலமும் வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதே எங்களது நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது இலக்காகும். மற்றப்படி நான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். நாளை நமதே என்பதே எங்களது முழக்கம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-athirvu.com
எல்லோரும் சொல்லுகின்ற “உண்மை” இது!