சென்னை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
ராம் இயக்கிய ‘தரமணி’ திரைப்படத்தின் இசைக்காக யுவனுக்கு இந்த ஆண்டு தேசிய விருது கிடைக்கலாம் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு தரமணி பாடல்கள் வெளியானதிலிருந்தே பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டன.
தேசிய விருதுகள் தேர்வில் அரசியல் இருந்து வருகிறது என்கிற சர்ச்சை பல ஆண்டுகளாகவே புழங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் விருதுப் பட்டியல் அறிவிக்கப்படும்போது சர்ச்சைகள் உருவாவது வழக்கம்.
விருதுத் தேர்வு
பிராந்திய மொழிப் படங்கள் பல தன்னை மிரளவைத்ததாக தேர்வுக்குழுத் தலைவர் ஷேகர் கபூர் குறிப்பிட்டதைப் பெருமையாகக் கொள்ளும் அதே நேரத்தில் இந்த ஆண்டும் விருதுத் தேர்வு தொடர்பான சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இளையராஜா, ரஹ்மான்
தமிழ் மொழித் திரைப்படங்களைப் பொறுத்தவரை இசையமைப்பாளர்களில் தேர்வுக் கமிட்டியின் கண்களுக்குத் தெரிவது இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் மட்டும் தான். இருவரும் தான் மாற்றி மாற்றி விருது பெறுகிறார்கள். வேறு யாரையும் அவர்கள் கவனிப்பதே இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கவனத்தில் கொள்வதில்லை
தமிழ் சினிமாவின் இசைக்கான ஐகானாக இளையராஜாவும், ரஹ்மானும் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். ஆனால், உள்நாட்டுக்குள் தேர்ந்தெடுக்கப்படும் விருதுகளில் அவர்களைத் தாண்டி இருக்கும் மற்ற இசையமைப்பாளர்களையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமில்லையா?
தரமணி
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘காற்று வெளியிடை’ இசைக்கு சற்றும் சளைத்தது அல்ல யுவனின் ‘தரமணி’ பாடல்கள். ஆனால், அவற்றைப் பரிசீலிக்க தேசிய அளவிலான இந்தக் கமிட்டியில் யாரும் விரும்பவில்லை என விவாதம் கிளம்பியிருக்கிறது.
தேர்வுக் குழு
இந்தக் கமிட்டியில் தென்னிந்திய நடிகை கௌதமி இடம்பெற்றிருக்கிறார். சினிமாவின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது குறிப்பிட்ட பிரிவில் சற்றேனும் நிபுணத்துவம் பெற்றவர்களை வைத்துத் தேர்ந்தெடுப்பது தான் சரியான வழிமுறையாக இருக்க முடியும்.
கவனம் பெற
இதுவரை 5 முறை தேசிய விருது பெற்றிருக்கும் இளையராஜா, ஏற்கெனவே 4 விருதுகளைப் பெற்று தற்போது பெறவிருக்கும் 2 விருதுகளோடு இளையராஜாவை முந்தியிருக்கும் ரஹ்மான். இவர்களைத் தாண்டி மற்ற இசையமைப்பாளர்களுக்கு விருதுகள் கிடைக்கும்போது, மற்ற தமிழ் இசையமைப்பாளர்களின் இசை இன்னும் பரவலான தளங்களைச் சென்றடையும்.