சென்னை: தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினிகாந்த் என்பது இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். காவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் ஒரு புரட்சி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கௌதமன், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் குவிந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் 3 பேரை ஒரு கும்பல கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பதிவானது. இதை ரஜினி கடுமையாக கண்டித்தார்.
பாரதிராஜா கேள்வி
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் சீருடையில் இருந்த போலீஸார் மீது தாக்குதல் நடத்துவது வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். இந்த அக்கறையை ஏன் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் ரஜினி காண்பிக்கவில்லை என கேட்டு பாரதி ராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
வேஷம் மெல்ல கலைகிறது
இந்நிலையில் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து பாரதிராஜா தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என்பது இப்போதுதான் தெரிகிறது. இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.
ராஜவாழ்க்கை
காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழன் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.
உணர்ந்து பேசுங்கள்
பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பார்த்து பேசுங்கள். ரஜினி வீட்டு சாப்பாடு, குடிநீருக்கு சேர்த்துதான் வீரத்தமிழ் இளைஞர்கள் தடியடியில் ரத்தம் சிந்தினர். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் குரல் கொடுக்காமல் தற்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன். தமிழர்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம் என்றார் பாரதிராஜா.