காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த மோதலில் போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினி, சீருடையில் இருந்த போலீஸ்காரரை தாக்கியது வன்முறையின் உச்சம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ரஜினியின் கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு எழுந்த வண்ணமே உள்ளது. டைரக்டர் பாரதி ராஜா, ரஜினியை கர்நாடகாவின் தூதுவர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மீண்டும் ரஜினியை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
அறவழி போராட்டத்தையே நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். காவிரி போராட்டத்தில் போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளோம்.
அதே நேரத்தில் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது என்பதை பார்க்க வேண்டும். போலீசார் தாக்கப்பட்டதை வன்முறையின் உச்சக்கட்டம் என்று கூறிய ரஜினி, போராட்டத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி கேட்டு தெரிந்திருக்கலாம்.
அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாரதிராஜாவும், வைரமுத்துவும் அவரது நண்பர்கள்தானே. இருவரிடமும் என்ன நடந்தது? என்று கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த தடியடி பற்றி ரஜினி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. திருச்சியில் போலீஸ்காரர் எட்டி உதைத்ததால் பலியான பெண் பற்றி கேட்ட போது கையெடுத்து கும்மிட்டு விட்டு எதுவும் பேசாமல் சென்றீர்கள்? அப்படி இருக்கும் போது இந்த நேரத்தில் மட்டும் ஏன் இத்தனை ஆவேசம். அப்படியென்றால் நீங்கள் நினைப்பது என்ன? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. ரஜினி ஆபத்தான சிந்தனை கொண்டவர்.
போலீஸ்காரர் தாக்கப்பட்டதை வன்முறையின் உச்சம் என்று வர்ணித்த ரஜினி, சிறுமி ஆஷிபா கொலை பற்றி எந்தவித கருத்தும் கூறாமல் இருப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? தேர்தல் நேரத்தில் ரஜினியை கடுமையாக எதிர்ப்போம். தமிழ் மண்ணை தமிழனே ஆள வேண்டும் என்கிற எங்கள் கொள்கையின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் அவருக்கு எதிராக களப்பணியாற்றும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
-athirvu.com