கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பாக `அன்பான் சின்ஸ்` (Unborn Sins) என்றொரு ஹாலிவுட் படம் வெளியானது. கர்ப்பமாக இருக்கும் பெண், அந்தக் குழந்தை வேண்டாமென கருக்கலைப்புச் செய்துவிடுகிறார்; இறந்துபோன அந்தக் கரு பேயாக மாறி தன் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் என்பதுதான் அந்தப் படத்தின் கதை. கிட்டத்தட்ட அதுதான் தியாவின் கதை.
கிருஷ்ணாவும் (நாக ஷௌரியா) துளசியும் (சாய் பல்லவி) கல்லூரி நாட்களில் காதலிக்கின்றனர். துளசி கர்ப்பமடைகிறாள்.
இருவருக்கும் கல்யாணம் செய்துவைக்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டாலும் துளசி படித்து முடிக்கும்வரை குழந்தை வேண்டாம் என்றுகூறி, அந்தக் கர்ப்பத்தை கலைக்க வலியுறுத்துகின்றனர். கரு கலைக்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணாவும் துளசியும் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவராக விபரீதமான முறையில் சாகிறார்கள்.
துளசிக்குக் கருக்கலைப்புச் செய்த மருத்துவரும் சாகிறார். பிறகுதான், கருவிலேயே கொல்லப்பட்ட குழந்தை பழிவாங்குகிறது என்பது துளசிக்குத் தெரிகிறது.
அந்தக் குழந்தை, முடிவில் தன் தந்தையையே பழிவாங்க நினைக்கிறது. துளசியால் தன் கருவிடமிருந்து கணவனைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் மீதிக் கதை.
சமீபகாலமாக தமிழ்த் திரைப்படங்களில் வரும் பேய்கள், நாம் திரையில் பார்த்துப் பழகிய பேய்களைப் போல அல்லாமல், பல விசித்திரங்களோடு தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.
கடந்த வாரம் வெளியான மெர்க்குரியில், உயிரோடு இருக்கும்போது பார்வையற்றவராக இருந்த ஒருவர், விபத்தில் இறந்து பேயாக மாறிய பிறகும் பார்வையில்லாமலேயே திரிந்து, பழிவாங்கினார்.
இந்தப் படத்தில் கருவான சில வாரங்களிலேயே கலைக்கப்பட்ட கரு, போஷாக்கான, அழகான குழந்தை பேயாக வளர்ந்துவந்து பழிவாங்குகிறது. கொஞ்சம்விட்டால் பள்ளிக்கூடத்திலேயே சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது.
படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே கொலைகள் நடக்க ஆரம்பித்துவிடுகின்றன என்பதால் துவக்கத்தில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம்.
பிரதானமான கதையிலிருந்து பாடல், சண்டை என்று விலகாமல் நேர்கோட்டில் திரைக்கதை செல்வதும் 100 நிமிடங்களிலேயே படம் முடிந்துவிடுவதும் படத்தின் பலம்.
ஆனால், படத்தின் பிற அம்சங்கள் எல்லாமே ஏமாற்றமளிக்கின்றன. படத்தில் வரும் பாத்திரங்கள் இடையில் எந்தவிதமான உணர்வுபூர்வமான பிணைப்பும் இல்லை.
எல்லாப் பாத்திரங்களுமே துண்டுதுண்டாக இருப்பதால், படத்தில் யார் பேயால் கொல்லப்பட்டாலும் யாரும் வருத்தப்படுவதில்லை.
அதனால் படம் பார்ப்பவர்களுக்கும் அந்த மரணம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. பேய்ப் படம் என்றால் ஏதாவது ஒரு காட்சியிலாவது திடுக்கிட வைக்க வேண்டாமா? அதுவும் இல்லை.
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து, முதல் படத்திலேயே பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சாய் பல்லவி இந்தப் படத்தில் சில காட்சிகளைத் தவிர, பெரும் ஏமாற்றமளிக்கிறார்.
நாயகனாக வரும் நாக ஷௌரியா, எப்போதும் குழப்பத்தில் இருப்பதைப்போன்ற முகத்துடனேயே இருக்கிறார். மற்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
சிரிப்பு போலீஸாக வரும் ஆர்.ஜே. பாலாஜியும் காவலராக வரும் குமரவேலும் சிரிக்கவைக்கவில்லையென்றாலும் நடிப்பில் மோசமில்லை.
ஆனால், இவையெல்லாவற்றையும்விட படத்தில் வேறொரு பிரச்சனை இருக்கிறது. கருக் கலைப்புக்கு எதிராக எந்தத் தர்க்கமும் இல்லாத ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது இந்தப் படம்.
படத்தின் முடிவில் வரும் ஸ்லைடுகளில், ‘இந்தியாவில் நடக்கும் கருக்கலைப்புகளில் 56 சதவீதம் பாதுகாப்பற்றவை’, ‘பிறக்கும் குழந்தை இந்திரா காந்தியாகவோ, அன்னை தெரசாவாகவோ இருக்கலாம்’ என்றெல்லாம் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பே, 19 வயதில் கர்ப்பமடையும் கதாநாயகிக்கும் படத்தின் முடிவில் சொல்லப்படும் இந்தச் செய்திகளுக்கும் என்ன சம்பந்தம்?
உலகம் முழுவதும் பெண்ணிய இயக்கங்கள் நடத்திய போராட்டங்களே கருக்கலைப்புகளை சட்டபூர்வமாக்கின. இன்னும் பல நாடுகளில் மதவாதிகள் கருக்கலைப்புகளை அனுமதிப்பதில்லை.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இயக்குனர் விஜய் இந்தப் படத்தில் கருக்கலைப்புக்கு எதிராக முன்வைக்கும் கருத்துகள் பிரச்சனைக்குரியவை. -BBC_Tamil