இசையால் நமது வாழ்வின் நொடிகளை இனிமையாக உருவாக்கிய இசைபிதாமகன் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கில் இன்று கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நம் மனதில் இசையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இளையராஜா. திறமை ஒன்று இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்து சொன்னவர் ராஜா. அதனால்தான் 5 முறை தேசிய விருது அவரை அலங்கரித்தது. அந்த படங்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு இதோ.
சாகர சங்கமம்
அன்னக்கிளியில் அறிமுகமாக நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், அதுவரை எந்த விருதும் அவருக்கு கிடைக்கப்படவில்லை சுமார் 10 ஆண்டுகள் கழித்து முதல் விருது ராஜா வீட்டு கதவை தட்டியது. தமிழ் திரையுலகிலிருந்து இல்லை. தெலுங்கு பட உலகிலிருந்து. கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு கமல் நடித்து “சாகர சங்கமம்” திரைப்படம் வெளிவந்தது. நமது பாரம்பரிய நடன பெருமைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்த படத்தின் இசைக்கு இளையராஜாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்று நிரூபித்திருப்பார் இசைஞானி. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் சங்கீதம் தெரியாதவர்களையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல, 1980-களின் துவக்கத்தில் ஹிந்தி மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் பிடியில் இளைஞர்கள் வீழ்ந்து கிடந்த காலம் அது. ஆனால் சாகர சங்கமம் திரைப்படமானது பரதநாட்டியம், குச்சிப்புடி கலைகளை இளைஞர்கள் ஏராளமானோர் தேடி போய் கற்று கொள்ள தூண்டுகோலாக அமைந்தது. கலைவடிவங்களின் மேன்மை மிளர்ந்த அந்த படத்துக்கு பல தரப்பட்ட வெற்றிகள் குவிந்து வந்தாலும், சிறந்த இசைக்கான தேசிய விருதினை முதன்முறையாக இளையராஜாவுக்கு பெற்று தந்தது. இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, “இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி… அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர்” என்று புகழ்ந்தாராம்.
சிந்துபைரவி
தமிழ் சினிமாவில் திருவள்ளுவரையும், பாரதியையும் தீராத காதலினால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஒரே கலைஞனான கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளிவந்த படம் சிந்து பைரவி. அவரது சிந்துபைரவி படத்தில் பாரதியாரின் பாடல்களை திரைக்கதைக்கு ஏற்றார்போல் ஆங்காங்கே தவழ விட்டிருப்பார் பாலச்சந்தர். இதில் அனைத்து பாடல்களுமே ஹிட்தான். கர்நாடக பாடல்களை குறிப்பிட்டவர்கள்தான் பாட வேண்டும் என்ற நியதியையும், அதுபோன்ற வழக்கத்தையும் தூக்கி எறிய செய்தது. பல காலங்களாக கர்நாடக சங்கீதங்களில் எந்தவித திருத்தங்களும் செய்யாமலும், அதன் தெய்வாம்சம் குறையாமலுமே கையாளப்பட்டு வந்தது. ஆனால் தியாகய்யர் காம்போதி ராகத்தில் இயற்றிய “மரி மரி நின்னே” மூலம் அது நொறுக்கப்பட்டது. தன் அசாத்திய துணிச்சலான இசைத்திறமையால் இசைஞானி, காம்போதியில் இருந்த “மரி மரி நின்னே” என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்து கொண்டு, சாருமதியில் தான் உருவாக்கிய ராகத்தில் இட்டு நிரப்பி இசை அறிவின் வெளிப்பாட்டை உணர்த்தினார். இது அவருக்கு தமிழில் முதல் தேசிய விருதினை பெற்று தந்தது.
ருத்ரவீணை
1988-ல் பாலச்சந்தர் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்கிய படம் ருத்ர வீணை. தமிழில் கமல் நடித்து உன்னால் முடியும் தம்பி என்ற பெயரிலும் எடுக்கப்பட்டது. சங்கீதத்தைவிட ஏன் கடவுளை விட மனிதாபிமானமே பெரியது என்பதே இந்த படத்தின் கரு. இரண்டு படங்களுக்குமே இசைஞானி இசை. இரண்டு மொழிகளின் பாடல்களுமே அனைத்து தரப்பினரையும் ஈர்த்தது. இந்த படமே ஒரு சங்கீத பரம்பரையை பற்றியது என்பதால், இசைக்கு முக்கியத்துவம் அதிகம். இளையராஜா இந்த படத்தில் ராகங்களையும், தாளங்களையும், பாவங்களையும், அள்ளிக்கொட்டி புகுந்து விளையாடியிருப்பார். படம் முழுவதும் கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் ஒரு பக்கம் தென்றலாய் தவழ்ந்துவரும். ஆனால் அதே கீர்த்தனைகள் மாற்றியமைக்கப்பட்டு ஜனரஞ்சக பாடலாய் மற்றொரு புறம் புயலென நுழையும். நுட்பமான பின்னணி இசையினை அமைத்த ராஜாவுக்கு இந்த இந்த படம் தேசிய விருதினை பெற்று தந்தது.
பழசிராஜா
இது கேரள மண்ணில் 18-ம்நூற்றாண்டிலே முதல்முதலாக பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதுர்த்து போராடின ஒரு மன்னரின் வரலாறு. அவர் பெயர்தான் வீர கேரள வர்மா பழனிராஜா. இந்த படத்தில் இளையராஜாவின் ரசிகர்களை தன் இசைவழியாக அந்த நூற்றாண்டு காலத்தின் பண்பாட்டுக்குள்ளேயே அழைத்து சென்று விட்டிருப்பார். இதுபோன்று இசையமைப்பது ராஜாவுக்கு ஒன்றும் புதிது அல்ல. பல வருஷங்களுக்கு முன்னாடி மலையாளத்திலே ‘அதர்வம்’னு ஒரு மாந்த்ரீக படத்திலேயும் இதுபோன்ற இசையை பின்னியெடுத்திருப்பார். இந்த படத்தில் பெரும்பாலான வாத்தியங்கள் கேரளத்துக்கு மட்டுமே உரிய தாளவாத்தியங்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த இசையை கேட்டால், இளையராஜாவுக்கு கேரள இசை தவிர வேறு எதுவுமே தெரியாத ஒரு அறிவூஜீவி போட்ட இசையின் வடிவமாகவே தெரியும். பழசிராஜா போன்ற வரலாற்று படங்களுக்கு இசையமைப்பது சாதாரண விஷயம் இல்லை. அன்றைய நூற்றாண்டின் களம், பண்பாடு தெரியாமல் இசையமைத்துவிட முடியாது. அது ராஜாவை தவிர வேறு யாரால் முடியும்? இந்தப் படத்துக்காக இளையராஜா எழுதிய இசைக் கோர்வைகளை லண்டன் ராயல் பில்ஹார்மனிக் குழு வாசித்தது. தென்னிந்திய இசைக்கேற்றவாறு இசைகளை உருவாக்கி தந்ததால்தான் அது தேசியவிருது வரை சென்று பெருமையை தந்திருக்கிறது.
தாரை தப்பட்டை
இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற சிறப்புடன் வெளியான இயக்குனர் பாலாவின் திரைப்படம் தாரை தப்பட்டை. இதில் இளையராஜாவின் நாதஸ்வர, தவில் இசையானது அனைத்துவிதமான தமிழ்சினிமாவின் கசடுகள், களங்கங்கள், அனைத்தையும் புரட்டி போட்டு செல்லும் வகையில் இருந்தது. இதுதான் எங்களின் பாரம்பரியம், இதுதான் எங்கள் தாலாட்டு, இதுதான் எங்கள் வாழ்வியல், இதுதான் எங்கள் ஜீவநாடி… என்று சொல்லி சொல்லி தவில், பறை, பம்பை போன்ற கருவிகளில் இளையராஜா தந்த ஜால இசை விண்ணையே அதிர செய்தது. ஒவ்வொரு கடைகோடி ரசிகன் முதல் அண்ட சராசரம் வரை ஆர்ப்பரிக்க வைத்தது. துள்ளி எழுந்து ஆட்டம் போட செய்தது. சிலிர்ப்பும் கிளர்ச்சியும் மாறி மாறி வந்த உணர்வை ரசித்து மகிழ்ந்தனர் கலைஞர்கள். இந்த படத்தின் பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு கிடைத்தது.
விருதுகளை தாண்டிய வியப்புகள்
தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டதற்காக ஒவ்வொரு தமிழனும் தலை வணங்கினாலும், ராஜாவின் சில அசாத்திய சாதனைகள் என்றும் நம் மனதை விட்டு அகலாது. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல்தான் “காதலின் தீபம் ஒன்று”. அதேபோல, இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் பிள்ளைநிலா. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”. 12 மணி நேரத்தில் மொத்த ரீ ரிக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் “100-வது நாள்”. அதுமட்டுமல்ல, 3 நாளில் வெறும் 5 இசைக்கலைஞர்களை கொண்டு ரீரெக்ர்டிங் செய்யப்பட்ட படம்தான் சிகப்பு ரோஜாக்கள். சிம்பொனி அமைக்க மற்றவர்களுக்கு 6 மாத காலம் பிடிக்கும் என்றால் ராஜாவுக்கு வெறும் 13 நாள்தான் ஆனது. ப்ரியாவில் ஸ்டீரியோ முறையில் பாடல்பதிவு, புன்னகை மன்னன் படத்தில் கம்ப்யூட்டர் இசை, காயத்ரியில் எலக்ட்ரிக் பியானா அறிமுகப்படுத்தியதும் ராஜாவே. கவுண்டர்பாயின்ட் என்ற யுக்தியை சிட்டுக்குருவி படத்தில் “என் கண்மணி” பாடலில் பயன்படுத்தியதுடன், செஞ்சுருட்டி ராகத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற திரைப்பட பாடலை அமைத்ததும் ராஜாவே. இதுபோன்ற இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இதற்கெல்லாம் ராஜாவுக்கு என்ன விருது கொடுப்பது? எதை கொண்டு அவரது இசை தொண்டிற்கு ஈடு செய்வது? தனது தோழனான, மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டியின் மூலம் அள்ள அள்ள குறையாமல் புது, புது ராகங்கள் படைக்கும் இசைஞானிக்கு “இசை கடவுள்” என்ற விருதினைவிட அவருக்கு தருவதை தவிர வேறென்ன இருக்கிறது ரசிகர்களிடம்?
-tamil.filmibeat.com