சென்னை: ரஜினியின் காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. ஆனால் பட ரிலீசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்து ரஜினி தெரித்த கருத்துக்களுக்கு கர்நாடக அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கர்நாடகாவில் பட ரிலீசை தடை செய்தது, அம்மாநில திரைப்பட வர்த்தக சபை.
இதனை நீக்க படக்குழு மற்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டாலும் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட பாதுகாப்பு கோரி நடிகர் தனுஷ், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில், தகுந்த பாதுகாப்புடன் காலா படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க, அம்மாநில உள் துறை செயலாளர், காவல்துறை தலைவர், பெங்களூரு காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என தனுஷ் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நாகேந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரத், தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தார்.