பாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்

சினிமாவில், ‘செக்ஸ்’ தொல்லைகள் இருப்பதாக இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பெரிய தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் கூறினர்.

நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்துக் கொண்டு இருந்தபோது அந்த படத்தின் கதாநாயகன் எனது காலை தடவி பாலியல் தொல்லை கொடுத்ததால் ஓங்கி அறைந்து விட்டேன் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.

பாலியல் தொல்லைகளை நடிகைகள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் இந்த குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல்பீரீத் சிங் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். “வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது. அப்படி எந்த தவறும் பட உலகில் நடக்கவில்லை. நான் 4 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு அதுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை” என்று அவர் கூறினார்.

இதற்கு தெலுங்கு நடிகை மாதவி லதா எதிர்ப்பு தெரிவித்ததுடன் ரகுல்பிரீத் சிங்கை கண்டித்தும் இருக்கிறார். அவர் கூறியதாவது:-

சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருக்கிறது. ரகுல் பிரீத் சிங் அப்படி எதுவும் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர் பொய் சொல்கிறார். செக்ஸ் தொல்லைகளை வெளிப்படுத்தினால் பட வாய்ப்பு கிடைக்காது என்றும் சினிமாவில் இருந்து ஒதுக்கி விடுவார்கள் என்றும் நடிகைகள் பயப்படுவதால் உண்மையை சொல்ல தயங்குகிறார்கள். ஹாலிவுட் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கிறார்கள். இங்கு அந்த நிலைமை இல்லாதது துரதிர்ஷ்டம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

-tamilcinema.news