பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்,  சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில், “இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு” என்று பெற்றோர் சொன்னதால் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது பள்ளி மாணவியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என 16க்கும் மேற்பட்டோர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக வெளியான தகவல் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலுள்ள பெண்களின் பாதுகாப்பை காரணம் காட்டி சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை உலக ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் சார்பில் 13வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட 28 நாடுகளை சேர்ந்த 171 வீரர், வீராங்கனைகளும், இந்தியா சார்பில் 12 பேரும் பங்கேற்றுள்ளனர்.

“இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு”

இந்த போட்டியில், இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் கொண்ட சுவிட்சர்லாந்து அணியும் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஸ்குவாஷ் விளையாட்டில் ஜூனியர் பிரிவு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அம்பர் அலின்கெக்ஸ் என்ற 16 வயது மாணவி இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மையால் இந்த போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, சுவிட்சர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான பாஸ்கல் புரினிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “எங்களது நாட்டின் சார்பில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என்று ஆறு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளோம். ஆனால், நாட்டின் முதல்நிலை வீராங்கனையான அம்பர் அலின்கெக்ஸ் இந்தியாவில் பெண்களுக்கு நிலவும் ஆபத்தான சூழ்நிலையால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது வருத்தமான ஒன்று” என்று அவர் கூறினார்.

“அம்பர் அலின்கெக்ஸ் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு மிகவும் ஆவலுடன்தான் இருந்தார். ஆனால், இந்தியாவில் பெண்களுக்கெதிரான நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகளை இணையத்தில் படித்த அவரது தாயார், தங்களது மகளை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அனுப்பமுடியாது என்று உறுதிபட கூறியதால்தான் அவர் பங்கேற்கவில்லை” என்று கூறினார்.

ஆனால், இதுவரை தனக்கும், தனது அணியினருக்கும் சென்னையில் எவ்விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், “நான் போட்டி நடைபெறும் மைதானத்திலிருந்து அருகிலுள்ள இடத்திற்கு ஆட்டோவில் சென்றேன். அதற்கு கட்டணமாக 21 ரூபாயை ஆட்டோக்காரர் கேட்டதற்கு, நான் 30 ரூபாயாக கொடுத்தேன். மீதி பணம் வேண்டாம் என்று நான் கூறியபோதும், அதை மறுத்த ஆட்டோக்காரர் 10 ரூபாய் கொடுத்தார். என்னிடம் ஒரு ரூபாய் சில்லறை இல்லை என்றவுடன், பரவாயில்லை என்று கூறிவிட்டு அவர் நகர்ந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது” என்று பாஸ்கல் கூறுகிறார்.

“வீரர்களின் பாதுகாப்புக்கு பிரச்சனையில்லை”

இந்த விவகாரம் குறித்து போட்டி அமைப்பாளரான மைக்கேலிடம் பேசியபோது, “உலகளவிலான இந்த போட்டியில் 28 ஆண்டுகளை சேர்ந்த 171 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பதற்கு பதிவே செய்யாத அந்த வீராங்கனை குறித்து எங்களால் எந்த தகவலையும் வழங்க முடியாது” என்று கூறினார்.

“அவமானமாக கருதுகிறேன்”

சென்னையில் நடக்கும் ஒரு சர்வதேச போட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பை காரணம் காட்டி, சுவிட்சர்லாந்து வீராங்கனை பங்கேற்காதது குறித்து தமிழகத்தின் முதல் சர்வதேச பெண் கால்பந்து நடுவரான ரூபா தேவியிடம் கேட்டபோது, “இது மிகவும் அவமானகரமான செய்தி. நமது நாட்டில் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டில் ஒரு சர்வதேச போட்டியை நடத்துவது என்பது கடினமான விடயமாக இருக்கும்போது, அதில் பெண்களுக்கான பாதுகாப்பை காரணம் காட்டி ஒரு முன்னணி வீராங்கனை பங்கேற்காதது சர்வதேச அளவில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையே காட்டுகிறது” என்று கூறுகிறார்.

“நான் சில வருடங்களுக்கு முன்பு கத்தாரில் நடந்த சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றுக்கு நடுவராக சென்றிருந்தேன். அப்போது, அங்கிருந்த சீனாவை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை பற்றி விசாரித்தபோது, அதற்கு பதில் சொல்லமுடியாமல் தலைகுனிய நேரிட்டது. நமது நாட்டின் பெண்களுக்கே இங்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கும்போது, வெளிநாட்டை சேர்ந்த ஒரு இளம் வீராங்கனை இந்த போட்டியில் பங்கேற்காமல் இருப்பதில் தவறேதும் உள்ளதாக எனக்கு தெரியவில்லை” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான குற்றங்களை, கடுமையான தண்டனைகளை அளித்து தடுக்காதவரை, உலக அரங்கில் இந்தியாவுக்கான மதிப்பும், இதுபோன்ற விளையாட்டுகளை நடத்துவதில் பிரச்சனையும் தொடர்ந்து இருக்கும் என்று ரூபா தேவி கூறுகிறார்.