சென்னை, ஜூலை 30: ஓய்வறியா உழைப்பிற்கு சொந்தக்காரரும் காதலையும் வீரத்தையும் இருவிழியெனக் கொண்டு பழந்தமிழர் வாழ்ந்ததைப் போல இலக்கியத்தையும் அரசியலையும் இருகரமெனக் கொண்டு திகழும் ஒரேத் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி நலமாக இருக்கிறார்; அவரின் உடல்நிலை சீராக இருக்கிறதென்று மலேசியவாழ் தமிழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தெரிவித்தார்.
“என் மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற ஒரே விசயம், கலைஞர் தன் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ஓராயிரச் செய்திகளை சொல்ல முடியாமல், பேச முடியாமல் மனம் விம்மி இருப்பதை எண்ணித்தான்” என்று திமுக மாணவரணியின் மேநாள் செயலாளருமான அவர் செம்பருத்தி(மலேசியா இன்று) இணைய ஏட்டிற்கான சிறப்பு செவ்வியில் குறிப்பிட்டார்.
திமுக தொண்டர்கள், தமிழ் மக்கள், தமிழக அரசியல், புதுடில்லியில் மையம் கொண்டுள்ள இந்திய தலைவர்கள், உலக அரசியல், இலக்கியம், கலை-பண்பாடு குறித்தெல்லாம் நாள்தோறும் எண்ணற்ற கருத்துக்களை, அவர்தம் அரசியல் அனுபவ வெளிப்பாட்டை, சமூக சிந்தனையை எழுதியும் பேசியும் வெளிப்படுத்தி வந்த அவர், அது முடியாமல் அவர் பரிதவிப்பதை அவர் அருகில இருந்து அவதானித்தவன் என்ற வகையில் என் மனம் அடையும் வேதனைக்கு அளவில்லை.
கலைஞரின் இதயத் துடிப்பு குடி கொண்டுள்ள இடம் அவர்தம் ஆள்காட்டி விரல் நுனியாகும். எழுதுவதை இதயத் துடிப்பாகவும் வாசித்து அவதானிப்பதை மூளை இயக்கமாகவும் கொண்டிருந்த அவருக்கு இவை இரண்டும் தள்ளி நிற்பதுதான் அவரின் உடல் நலிவுக்கு முதன்மைக் காரணம் என்று கடலூர் சட்டமன்றத் தொகுதி மேநாள் உறுப்பினருமான புகழேந்தி தெரிவித்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவம் பெற்று வந்த அவர், காவேரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அளவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சற்றே உடல் நலம் பாதிக்கப்பட்டார். அங்கு சேர்ந்த பின், கலைஞரின் உடல் நலம் சீராக நிலைக்குத் திரும்பினாலும் சனிக்கிழமை முன்னிரவில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.
ஆனால், தற்பொழுது(ஞாயிறு மாலை 5.15 மணி அளவில்) மிகவும் அதிசயிக்கத் தக்க அளவில் ஒரு மருத்துவ அற்புதம் என்று கூறத்தக்க வகையில் தலைவர் கலைஞர் உடல் நலம் தேறி வருகிறார்.
வீடு வாசல் குடும்பத்தை மறந்து பசி என்பதையும் உணராமல் பல்லாயிரக் கணக்கில் காத்திருக்கும் திமுக தொண்டர்களில் நானும் ஒருவனாக சென்னையிலேயே இருக்கிறோம்(புகழேந்தி இருக்கிறோம் என்று சொல்லவில்லை; கிடக்கின்றோம் என்றார்) என்றார். ஆனாலும், தலைவரைப் பற்றி எண்ணும்பொழுதெல்லாம அவரின் மனதில் சிந்தாமல் சிதறாமல் குடிகொண்டிருக்கும் ஊக்க உணர்வு எங்களின் மனதையும் கொஞ்சம் தொற்றிக் கொள்வதால் பசியையும் களைப்பையும் உணர்வதில்லை.
தலைவரை மீண்டும் கோபாலபுரம் இல்லத்தில் சேர்த்துவிட்டுத்தான் இல்லம் திரும்புவோம் என்னும் வைராக்கிய மனதுடன் சென்னைவாசிகளாகிவிட்ட தொண்டர்களில் ஒருவனாகச் சொல்கிறேன், அந்த நாள் விரைவில் அமையும். அந்த அளவிற்கு கலைஞரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முகத்தில் மெல்லிய தென்றலில் அசைந்தாடும் கொடியைப் போல நின்றாடும் புன்னகை வெளிப்படுத்துகிறது என்று புகழேந்தி மேலும் சொன்னார்.