ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி; கட்சி விதிமுறைகளை வெளியிட்டார் ரஜினி!

“ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி, இளைஞர் அணியில் 35 வயதுக்கு உட்பட்டவரே இருக்க முடியும், கட்சிக் கொடியை காரில் பயன்படுத்தக் கூடாது” என்பது உட்பட, கட்சிக்கான பல்வேறு விதிமுறைகளை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த வருட இறுதியின் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சியை துவக்க உள்ளார். முன்னதாக, மக்கள் மன்றத்தை துவக்கி, அதன் வாயிலாக, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், மக்கள் மன்றத்தின் சட்ட விதிகள் அடங்கிய புத்தகத்தை, ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். அதில், இடம் பெற்றுள்ள முக்கிய விதிகள்:

  • இளைஞர் அணியில், 35 வயதுக்கு உட்பட்டவரே நிர்வாகியாக இருக்க முடியும். ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும். ஜாதி, மத அமைப்பில் உள்ளவர்கள், உறுப்பினராக முடியாது

  • மன்றத்தின் கொடியை, நிகழ்ச்சியின் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வாகனங்களில் நிரந்தரமாக பயன்படுத்தக் கூடாது; மாநாடு மற்றும் பிரசாரத்தின் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். துணியாலான கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பிளாஸ்டிக்கிற்கு அனுமதி இல்லை

  • மன்றத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சேரலாம். தலைமையின் முடிவே இறுதியானது. பெண்கள், முதியவர்களிடம் கண்ணியம் தவறக்கூடாது

  • தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது; தனி நபர் விமர்சனம் கூடாது. தலைமையின் உத்தரவு இல்லாமல், மன்றத்திற்காக நிதி வசூலிக்கக் கூடாது. இவை உட்பட, பல விதிகள், புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

-4tamilmedia.com