தூக்கமில்லா இரவுகளுடன் தொல்லைப்படுகிறார் மோடி!

‘ஞாயிறு’ நக்கீரன் – மோடியைவிட இந்த ‘லேடி’தான் நிர்வாகத் திறமை மிக்கவர் என்று சொல்லி பிரதமர் பதவிமீது மாறாத மோகம் கொண்டிருந்த ஜெயலலிதா, தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, கூட்டணிக் கட்சிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, தேர்தல் ஆணையத்துடன் மட்டும் இரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு அவர் களம் கண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழகக் கிளையும் அதற்கு ஏதுவாக தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் தேர்தலுக்கு இரண்டு நாள் முன் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. பின் என்ன? பண பரிவர்த்தனை ஏகமாக நடைபெற்றது. ஜெயலலிதாவும் 37 தொகுதிகளில் வென்றார். கன்னியாகுமரி-யில் பொன்.இராதாகிருஷ்ணன் பாஜக சார்பிலும் தர்மபுரியில் இரா.அன்புமணி பாமக சார்பிலும் வென்றனர். இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக தோற்றதை  ஜெயலலிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனாலும், கடைசியில் ஒரு பயனும் இல்லாமல் போய்விட்டது. பாஜக-விற்கு ஒருவேளை அறுதிப் பெரும்பான்மை கிடைத்திராவிட்டால், வாஜ்பாயை ஆட்டி வைத்ததைப் போல நரேந்திர மோடியையும் ஒரு கை பார்த்திருப்பார் ஜெயலலிதா. குறைந்த பட்சம் துணைப் பிரதமர் பதவியையாவது பெற்றிருப்பார்.

ஜெயலைதாவின் போதாத காலம், 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவு வெளியான சமயத்தில்  பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. அந்த நேரத்தில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவை பாஜக-தான் ஆளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவின் நலிந்த மக்களும் நடுத்தட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த-தற்கு மாறாக, பொது மக்கள் நலனை அடியோடு புறந்தள்ளிவிட்டு, வர்த்தகப் பெருமுதலாளிகளின் நலனுக்காகவே ஆட்சி நடத்த தொடங்கிவிட்டார் மோடி. 2014 பொதுத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அத்தனை-யிலும் மோடியின் பாஜக மண்ணைத்தான் கவ்வி வருகிறது.

மொத்தத்தில், 2019 மே மாதத்தில் நடைபெற இருக்கும் அடுத்தப் பொதுத் தேர்தல் மோடிக்கு கடும் சவாலாக இருக்கும்; பாஜக ஆட்சி தொடருமா என்பதே ஐயம். இந்தியாவில் ஒரேக் கட்சி என்பதற்கு மோடி அநேகமாக முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றுதான் புதுடில்லி அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இனி எப்பொழுதும் இந்தியாவில் கூட்டாட்சிதான் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் எப்படியும் பிரதமர் நாற்காலியை என்ன விலை கொடுத்தாயினும் தக்கவைத்துக் கொள்வது என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார்.  அதன் வெளிப்பாடுதான், இந்தியாவின் பொருளாதாரமும் நாணய மதிப்பும் மிகவும் சரிவு கண்டுள்ள இந்த நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் முன்னைவிட வலுவாக இருப்பதாக தனக்கு வேண்டிய தகவல் சாதனங்களின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மோடி.

இதன் இன்னொரு கூறாகத்தான், இந்திய மக்களில் அடுத்த பிரதமராக மோடிக்கு 49 விழுக்காட்டினரும் ராகுல் காந்திக்கு 11 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவுத்துள்ளனர் என்று அடுத்தக்கட்ட பொய்ப்பிரச்சாரத்தை பாஜக தலைமை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பாஜக-விற்கு இருக்கும் ஒரேப் பற்றுக்கோடு அதிமுக சார்பில் ஆட்சி நடத்தும் பழனிசாமி-பன்னீர் அடிமைக் கூட்டம்தான். இந்தக் கூட்டத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக குட்கா ஊழல் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் அதிமுக ஆட்சிக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதனுடன் கூட்டு வைக்க நினைக்கும் பாஜகவையும் பாதிக்கும் என்பதால், அதைத் திசை திருப்பும் வகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எழுவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதி மன்றத்தை விட்டு சொல்ல வைத்துள்ளது மோடி அரசு.

தமிழக அரசியல் தலைவர்கள் தற்பொழுது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மீது கவனம் செலுத்துவதால், குட்கா ஊழல் பிரச்சினை நமர்த்து வருகிறது.

இதே புதுடில்லி உச்சநீதி மன்றம்தான், ராஜீவ் கொலை வழக்கைத் தொடர்ந்தது மத்திய உளவுத் துறை என்பதால், இது குறித்து எந்த முடிவையும் எடுப்பதற்கு மத்திய அரசுக்குத்தான் உரிமை உண்டேத் தவிர, மாநில அரசு இதில் தலையிட முடிதாதென்று நான்கு ஆண்டுகளுக்கு முன் சொன்னது. இப்பொழுது மாநில அரசுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டென்று மாற்றி கருத்துச் சொல்கிறது. இந்திய நீதிக் கட்டமைப்பு ஏறக்குறைய பாஜக கைப்பாவையாகி விட்டது, இதன் மூலம் தெளிவாகிறது.

உண்மையில் ராஜீவ் கொலை வழக்கில் பல இரட்டடிப்புகள் உள்ளன. ராஜீவ் காந்தியை இடைவார் குண்டு மூலம் கொன்றதாக சொல்லப்படும் தானு, 1991 மே 21-க்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே திருப்பெரும்புதூரில் லதா பிரியகுமார் விட்டில்தான் தங்கி உள்ளார்.  லதா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக அந்த நேரத்தில் இருந்திருக்கிறார். இத்தனைக்கும், லதா மரகதம் சந்திரசேகரின் மகள் ஆவார்.

மரகதம் சந்திரசேகர், பழுத்த காங்கிரஸ்காரர். அதைவிட, ராஜீவ் கொல்லப்பட்ட திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் மரகதம் அம்மாள். லதா பிரியகுமாரின் கணவர் ஒரு சிங்களர். இவர்களை யெல்லாம் விசாரிக்காமல் காங்கிரஸ் அரசு வசதியாக ஒதுக்கி விட்டது அப்போது.

1991 மே 21-ஆம் நாளில் ராஜீவ் காந்தி கலந்து கொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கடைசியில் ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலில் ஹைதராபாத்தில் பிரச்சாரக் கூட்டம் முடிந்து தமிழகத்திற்கு புறப்பட இருந்த நேரத்தில், ராஜீவ் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்காக அமர்த்தப்பட்டிருந்த தனியார் விமானம் பழுதானதால் திருப்பெரும்புதூர் கூட்டம் அடுத்த நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டு ராஜீவ் காந்தியும் மாற்று விமானம் மூலம் பெங்களூருவுக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.

அடுத்த நாள்தான் பழுது பார்க்க முடியும் என்று சொல்லப்பட்ட விமானம் உடனே சரிசெய்யப்பட்டு, தூக்கத்தில் இருந்த ராஜீவை எழுப்பி, தமிழ் நாட்டிற்கு(திருப்பெரும்புதூர் தேர்தல் கூட்டத்திற்கு) தயாராகும்படி ஆஸ்கார் பெர்னாண்டஸ் வலியுறுத்தி இருக்கிறார். களைப்படைந்திருந்த ராஜீவ், நாளைக்கு செல்லலாம் என்று சொல்லியும் கேட்காத ஆஸ்கார் ராஜீவை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.

கர்னாடக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவரான ஆஸ்கார் பெர்னாண்டஸ்தான், ராஜீவ் காந்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்ட நடவடிக்கைகளை அப்போது ஒருங்கிணைத்தவர். தவிர, அன்றையக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி, தமிழக அதிமுக-காங்கிரஸ் கூட்டணித் தலைவர் என்ற வகையில் ஜெயலலிதா ஆகிய இருவரும் வரவில்லை.

தானுவுக்கு அடைக்கலம் கொடுத்த லதா ப்ரியகுமார், அவரின் கணவர், அவரின் தாய், வாழப்பாடி, ஜெயலலிதா ஆகியோரெல்லாம் விசாரணை வளையத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை யெல்லாம் விட்டுவிட்ட காங்கிரஸ், புகைப்படக் கருவிக்கு மின்கலம் வாங்கிக் கொடுத்ததைத் தவிர வேறொன்றையும் அறியாக பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவி எழுவர் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தும் மனம் மாறாத காங்கிரஸ், இந்த எழுவரின் விடுதலையை எதிர்க்கும் என்று தெரிந்தே மோடி அரசு, தமிழக அரசின்மீது பாரத்தை இறக்கிவைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது; நழுவிக் கொண்டது.

மோடி எதிர்பார்த்ததைப் போலவே காங்கிரஸ் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் ரன் தீப் சிங் சுர்ஜிவாலா, எழுவரின் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது, காங்கிரசுடன் ஒட்டி உறவாடும் திமுக, அதன் தோழமைக் கட்சிகளும் தமிழிய உணர்மிக்க இயக்கங்களுமான மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் நெருடலை ஏற்படுத்தும் என்று தெரிந்தே பாஜக வேண்டுமென்றே இப்படி செய்துள்ளது.

மொத்தத்தில், திமுகவின் கவனத்தை குட்கா பக்கத்தில் இருந்து திசை திருப்ப வேண்டும் என்ற பாஜக-வின் எண்ணம் ஈடேறி வருகிறது.

என்னதான் தகிடுதத்தம் செய்தாலும், வரும் மே மாதத்திற்கு தன் நிலை என்னாகும் என்ற பதற்றத்துடன் தூக்கமில்லா இரவுகளுக்கு சொந்தக்காரர் ஆகிவருகிறார் மோடி என்பது மட்டும் உண்மை!!.