திடீர் விஸ்வரூபம் எடுத்த “இசைப் புயல்”.. சிக்கித் திணறும் தமிழர்கள்!

சென்னை: வட கிழக்குப் பருவ மழை வருவது இருக்கட்டும், அது கொண்டு வரப் போகும் புயல்களும் ஒரு ஓரமாக இருக்கட்டும். இப்போது “இசைப் புயல்” தமிழகத்தை தாக்கிக் கொண்டுள்ளது. அதுவும் அடுத்தடுத்து.. !

அட, ஏ.ஆர். ரஹ்மானைத்தான் சொல்கிறோம். அடுத்தடுத்து ஏ.ஆர். ரஹ்மானின் இரு படங்களின் இசையால் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் தித்திப்பில் மூழ்கிப் போயுள்ளனர். எங்கு பார்த்தாலும் ரஹ்மானின் இசைதான் காதுகளை வருடிக் கொண்டுள்ளது.

முதலில் செக்கச் சிவந்த வானம். இப்போது சர்க்கார். இரு படங்களின் பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டாகியுள்ளன. இதில் சர்க்கார் விரைவில் வரப் போகிறது. செக்கச் சிவந்த வானம் சக்கை போடு போட்டு வருகிறது.

பெய்யென பெய்யும் இசை

செக்கச் சிவந்த வானம் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல்தான் இளைஞர்களின் கரண்ட் காதல் கீதம்.. அப்பப்பா என்னா மாதிரி டச்சிங் பாடல்.. வாயெல்லாம் பாட்டாகவும், மனசெல்லாம் சிலிர்ப்பாகவும் திரிகிறது இளையோர் கூட்டம்.. ஆனால் என்ன சுவாரஸ்யம் தெரியுமா.. இந்தப் பாடல் ரொம்ப காலத்துக்கு முன்பே வைரமுத்து எழுதியது. பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பில் ஒன்று. மறைந்த கலைஞர் கருணாநிதி பாராட்டி சிலாகித்த பாடலும் கூட..!

மெல்ல ஊடுறுவும் இனிமை

ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார் இந்த நீல மழைச் சாரல் பாடலை. நான் ஸ்டாப்பாக கேட்டுக் கொண்டிருக்கலாம், கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் போலவே, படத்தின் பாடல்களும் வெகுவாக பேசப்படுகிறது. மணி சார், சிம்பு சார், விஜய் சேதுபதி சார், அருண் விஜய் சார், அரவிந்த சாமி சார் ஆகியோரையும் தாண்டி ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பிரித்து மேய்கிறது ரசிகர் மனங்களை!

சர்க்கார் பாடல்கள்

அடுத்து சர்க்கார் படப் பாடல்கள். முதல் பாடலில் தமிழ்நாட்டு மக்களை “இன்னாங்கோ இது.. புச்சா கீதே வரிங்கெல்லாம்.. மாமே” என்று மெர்சலாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான், 2வது பாடல் மூலம் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் தொட்டுத் தட்டி எழுப்பி விட்டார். கிட்டத்தட்ட தமிழக மக்களின் குமுறலாக அந்தப் பாடல் உருவாகியுள்ளது எதேச்சையானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது தெரியவில்லை.

இன்னும் இருக்கு பாஸ்

இந்தப் பாடல்களோடு முடிந்து போகவில்லை எதுவும். அடுத்து 2.ஓ இருக்கிறது. இந்த வருடம் இசைப் புயலின் வருடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கட்டியம் கூறும் வகையில் சர்க்கார், செக்கச் சிவந்த வானம் படப் பாடல்கள் உள்ளன. வட கிழக்குப் பருவ மழை வரும் வரை.. நனைந்திருப்போம் இசைப் புயலின் இசை மழையில்!

-tamil.oneindia.com